தீபாவளி பண்டிகையை ஒட்டி சிவகாசியில் ரூ.7 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனையாகியுள்ளன.
புத்தாடை, இனிப்பு, வித விதமான உணவு வகைகளுடன், பட்டாசுகள் இல்லாத தீபாவளிப் பண்டிகை கொண்டாட்ட மென்பது கிடையாது. பட்டாசுக்கு பெயர்போன சிவகாசிக்கு வெளியூர் வாசிகள் சாரை- சாரையாக வாகனங்களில் குடும்பத்தினருடன் படையெடுத்து பட்டாசுகள் வாங்கி சென்றனர்.
இதன் காரணமாக சிவகாசியிலிருந்து சாத்தூர், விருதுநகர், திருவில்லிபுத்தூர் போன்ற ஊர்களுக்கு சென்று வரும் சாலைகளின் மார்க்கங்களிருந்து சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகரங்களுக்குள் வந்து செல்லும் வாகனங்களால் நகரின் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பட்டாசுகள் வாங்க வெளியூர் வாடிக்கையாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி பட்டாசு கடைகளில் கூட்டம் கூட்டமாக குவிந்து தங்களுக்கு தேவையான பட்டாசு ரகங்களை தேர்ந்தெடுத்து வாங்கிச் செல்கின்றனர்.
ஆன்லைன் மூலமாக பட்டாசு விற்பனை நடைபெற்று வந்தாலும், அந்த நடைமுறையை விரும்பாத மக்கள் பட்டாசுக் கடைகளுக்கு நேரில் வந்து தங்களுக்குப் பிடித்தமான பட்டாசுகளை ஆன்லைன் வர்த்தக விலையை விடவும், அதேபோன்று வெளியூர் பட்டாசு கடை விற்பனை விலையை விடவும், குறைந்த விலைக்கு சிவகாசி பட்டாசுக் கடைகளில் வாங்கிச் சென்றனர். அதே போன்று நடப்பாண்டில் வழக்கமான பட்டாசு ரகங்களுடன், புது வகையான பட்டாசு வகைகளும் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதால், புதுப்புது பட்டாசுகளை சிறுவர்- சிறுமியர்கள்- இளைஞர்கள்- பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சிவகாசியில் ரூ.7 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டை விட, பட்டாசு விற்பனை நடப்பாண்டு 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2026-ல் பட்டாசு உற்பத்தி அதிகரிக்கும் என பட்டாசு வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளன.
