காசி தமிழ் சங்கமத்தின் 3-வது கட்டப் பதிவிற்கான இணையதளத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இந்த 3-வது கட்ட காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி 2025 பிப்ரவரி 15-ம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தொடங்கும் என்று அறிவித்தார்.
10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வு 2025 பிப்ரவரி 24- ம் தேதி முடிவடையும். சென்னை தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் kashitamil.iitm.ac.in என்ற இணையதளத்தில், 2025 பிப்ரவரி 1-ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம் என்று அவர் கூறினார்.
தமிழகம் – காசி இடையேயான பிரிக்க முடியாத பிணைப்பு காசி தமிழ்ச் சங்கமம் 3-ம் கட்டத்தின் மூலம் மீண்டும் உயிர் பெறும் என்று கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனையில் உதித்த காசி தமிழ்ச் சங்கமம், தமிழ்நாடு – காசி இடையேயான காலத்தால் அழியாத பிணைப்பை கொண்டாடவும், நாகரிக தொடர்புகளை வலுப்படுத்தவும், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வை மேம்படுத்தவும் உத்வேகம் அளிப்பதற்கான முயற்சியாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு, காசி தமிழ் சங்கமம் மகா கும்பமேளா நிகழ்ச்சியுடன் ஒன்று சேர்ந்து நடைபெறுவதால் தனிச் சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்றும், அயோத்தியில் ஸ்ரீ ராம் லல்லாவின் ‘பிராண பிரதிஷ்டாவுக்கு’ பிறகு நடைபெறும் முதல் சங்கம நிகழ்ச்சி இது என்றும் தர்மேந்திர பிரதான் கூறினார். காசி தமிழ்ச் சங்கமம் 3-வது கட்டத்தில் தமிழக மக்கள் முழு அளவில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அகத்திய முனிவரின் பல்வேறு பரிமாணங்கள், சுகாதாரம், தத்துவம், அறிவியல், மொழியியல், இலக்கியம், அரசியல், பண்பாடு, கலை, குறிப்பாக தமிழ்நாடு ஆகிய துறைகளில் அவர் அளித்த அளப்பரிய பங்களிப்புகள் குறித்த கண்காட்சி, கருத்தரங்குகள், பயிலரங்குகள், புத்தக வெளியீடு போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சய் குமார், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மை தலைமை இயக்குநர் திரேந்திர ஓஜா, உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் சுனில் குமார் பர்ன்வால், பாரதிய பாஷா சமிதியின் தலைவர் திரு சாமு கிருஷ்ண சாஸ்திரி உள்ளிட்ட பிற உயரதிகாரிகளும் இந்த செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.