புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ ராணுவ தளபதியாக 1949ஆம் ஆண்டு ஜனவரி 15இல் பீல்ட் மார்ஷல் கே.எம். கரியப்பா நியமனம் செய்யப்பட்டார். அதனை குறிப்பிடும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 15இல் ராணுவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று ராணுவ தினத்தை முன்னிட்டு, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் BEG & சென்டர் பரேட் மைதானத்தில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த ராணுவ அணிவகுப்பில் 8 வகை ராணுவ படைப்பிரிவினார் இதில் பங்கேற்றனர். அதில் அனைவரது கவனத்த ஈர்த்த அணிவகுப்பு மாடல் என்றால் அது ரோபோடிக் நாய்கள் தான்.
தொழில்நுட்ப முன்னேற்றத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் அதன் தேவையை உணர்த்தும் வகையில் மல்டி-யூட்டிலிட்டி லெக்ட் எக்யூப்மென்ட் (MULEs) என்றும் அழைக்கப்படும் ரோபோட்டிக் நாய்களின் படைப்பிரிவு அணிவகுப்பின் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்திய ராணுவம் சமீபத்தில் தான் 100 ரோபோ நாய்களை தங்கள் ஆயுதக் குழுவில் சேர்த்தது. குறிப்பாக கடினமான நிலப்பரப்புகளில் ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்களை குறைக்கும் வகையில் இந்த ரோபோடிக் நாய்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
AVSM, GOC-in-C தெற்குக் கட்டளையின் லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் தலைமையில் இந்த ராணுவ அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது.