குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள என்னை அழைத்தது, பிரான்ஸ் நாட்டுக்கு அளிக்கப்பட்ட கௌரவம். இதற்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறியிருக்கிறார்.
இந்தியாவின் 75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக பிரான்ஸில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நேராக ஜெய்ப்பூர் சென்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை வரவேற்றார். தொடர்ந்து, இருவரும் ஜந்தர் மந்தரில் இருந்து சங்கனேரி கேட் வரை ரோடு ஷோ நடத்தினர். இந்த ரோடு ஷோவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து, இம்மானுவேல் மேக்ரான் தனது எக்ஸ் பக்தத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “2030-ம் ஆண்டுக்குள் பிரான்ஸில் 30,000 இந்திய மாணவர்கள் இருப்பார்கள். இதுவே எனது உயர்ந்த இலக்கு. இதனை நிகழ்த்துவதில் உறுதியாக இருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
மேலும், இந்திய மாணவர்களுக்கு பிரான்ஸ் எப்படி உதவும் என்று விளக்கிய மேக்ரான், “பிரெஞ்சு மொழி தெரியாத மாணவர்களை அங்குள்ள பல்கலைக்கழகங்களில் படிக்க அனுமதிக்கும் வகையில், சர்வதேச வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்கள், பிரெஞ்ச் மொழியைக் கற்க புதிய மையங்களுடன் ‛அலையன்ஸ் பிரான்சைஸ் நெட்வொர்க்கை’ உருவாக்கி வருகிறோம்.
சர்வதேச அளவில் வகுப்புகளை உருவாக்குகிறோம். இது பிரெஞ்சு மொழி கற்க விரும்பும் மாணவர்களை எங்கள் பல்கலைக்கழகங்களில் சேர அனுமதிக்கும். பிரான்ஸில் படித்த முன்னாள் இந்திய மாணவர்களுக்கும் விசா நடைமுறையை எளிமையாக்குவோம். இந்தியாவும், பிரான்ஸும் எதிர்காலத்தில் இணைந்து செய்ய வேண்டியது அதிகம்” என்று தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, டெல்லியில் நடைபெற்ற நாட்டின் 75-வது குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். பின்னர், இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
அப்பதிவில், “குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள என்னை அழைத்தது பிரான்ஸ் நாட்டுக்கு அளிக்கப்பட்ட கௌரவம். இதற்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இம்மானுவேல் மேக்ரான் கூறியிருக்கிறார்.