தேசம் முதலில் என்ற கொள்கையை முதன்மையாக வைத்து அரசு முன்னேறி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொள்கை முடக்கம் மற்றும் குடும்ப அரசியலுக்கு தனது அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் தனியார் தொலைக்காட்சி ஏற்பாட்டில் நடைபெற்ற உலகளாவிய உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி,
தனது அரசாங்கம் தேசம் முதல் என்ற கொள்கையை முதன்மையாகக் கொண்டு முன்னேறி வருவதாகக் கூறினார். ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது, அயோத்தியில் ராமர் கோயில் உள்ளிட்ட தனது அரசு நிறைவேற்றிய சாதனைகளை அவர் மேற்கோள் காட்டினார். இந்தியாவில் முழுமையடையாத பணிகள் அனைத்தையும் தேசம் முதல் என்ற சிந்தனையுடன் அரசாங்கம் முடித்தது என்றார்.
முந்தைய அரசுகள் கடைப்பிடித்த திட்டங்களை முடக்கி நிறுத்தும் அணுகுமுறையை தனது அரசு கைவிட்டதாக கூறினார். இந்தியா தனது ஒளிமயமான எதிர்காலத்திற்காக இரவும் பகலும் கடுமையாக உழைத்து வருவதாகவும், இந்தியாதான் எதிர்காலம் என்று அனைவரும் கூறத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இந்த எண்ணம் மற்றும் நம்பிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு பாஜக கூட்டணி அரசின் பணி, கலாச்சாரம் மற்றும் நிர்வாகமே மிகப்பெரிய காரணம் என்று சுட்டிக்காட்டினார். அரசு அலுவலகங்கள் இப்போது பிரச்சனையாக இல்லாமல், நாட்டு மக்களுடன் நட்பாக மாறி வருகின்றன என்றார்.
இந்தியா ஒரு பெரிய பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டதாக இன்று உலகம் நினைக்கிறது என்றால், அதற்குப் பின்னால் பத்து ஆண்டுகாலாக சக்திவாய்ந்த ஏவுதளமாக பாஜக இந்தியாவில் இருப்பதால்தான் என்று பிரதமர் கூறினார்.
தனது நாட்டு மக்கள் ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் இருக்கும் போதுதான் இந்தியா பெரிய பாய்ச்சலை எடுக்க முடியும் என்றார். கடந்த பத்து ஆண்டுகளில், மனநிலை மாற்றங்கள், தன்னம்பிக்கை, நல்லாட்சி உள்ளிட்ட பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றார்.
இன்றைய 21ஆம் நூற்றாண்டில் இந்தியா சிறியது என நினைப்பதை நிறுத்திவிட்டதாக தெரிவித்தார். இந்தியா இன்று செய்வது மிகப்பெரியது மற்றும் சிறந்தது என்று அவர் வலியுறுத்தினார்.