கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க செல்லும் ஒவ்வொரு நாட்டு படகிற்கும், 300 லிட்டர் டீசல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை கட்டுப்பாட்டில் உள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா, வரும் மார்ச் 14, 15 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படவுள்ளது.
இந்த திருவிழாவில் பங்கேற்பது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் தலைமையில், அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் மீனவ சங்கத்தினர் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில், இந்த ஆண்டு 100 நாட்டு படகுகளில் 3 ஆயிரத்து 500 பேர் திருவிழாவில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்கும் பயணிகளுக்கு ஆண்டு தோறும், மத்திய அரசு சார்பில் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் தங்களுக்கு எந்தவொரு உதவியும் கிடைப்பதில்லை என குற்றம் சாட்டியுள்ள மீனவர்கள், திருவிழாவில் பங்கேற்க செல்லும் ஒவ்வொரு நாட்டு படகிற்கும் 300 லிட்டர் டீசல் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.