தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சமூக விரோதிகளின் ஆட்சியா? – டிடிவி தினகரன் கேள்வி!

Estimated read time 0 min read

தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சமூக விரோதிகளின் ஆட்சியா? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே முட்டம் கிராமத்தில் நடைபெற்ற சாராய விற்பனையை தட்டிக் கேட்ட இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

சாராய விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட ஒரு சில தினங்களிலேயே ஜாமீனில் வெளிவந்து மீண்டும் சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர்களை இளைஞர்கள் தட்டிக் கேட்டதாலே இந்த படுகொலைச் சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொலை, கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவங்கள் என அனைத்து வகையிலான குற்றச் சம்பவங்களில் கைதாகும் குற்றவாளிகளுக்கு சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தராததும், ஜாமீனில் வெளியே வருவோரை கண்காணிக்கத் தவறியதுமே இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் அரங்கேற முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுவதாக தினகரன் தெரிவித்துள்ளார்.

சாராய விற்பனையை தட்டிக் கேட்பவர்கள், மணல் திருட்டை தடுத்து நிறுத்துவோர், மற்றும் சட்டவிரோத செயல்கள் குறித்து புகார் அளிக்கும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படும் அளவிற்கான பதட்டமான சூழலை வாடிக்கையாக்கிய திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இளைஞர்களை படுகொலை செய்த சாராய வியாபாரிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தருவதோடு,இது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு கைதாகும் நபர்களை இனியாவது தொடர்ந்து கண்காணித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தினகரன் வலியுறுத்தியுள்ளர்.

Please follow and like us:

You May Also Like

More From Author