காட்பாடியில் சாலையில் போடப்பட்டு காய்ந்த நெல், புற்கள் காரில் சிக்கி கார் தீ பற்றி எரிந்து நாசமானது.
காட்பாடி மேல்வடுகுட்டை பகுதியில் சேர்ந்தவர் ஆரோக்கியம். இவர் தனது ஃபோல்க்ஸ்வேகன் போலோ (Volkswagen Polo) காரில் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் திருமணம் முடிந்து மறு வீட்டுக்காக அவரது சம்மந்தி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது காட்பாடி அடுத்த தொண்டான்துளசி மோட்டூர் கானாரு பகுதியில் சாலையில் காய்ந்த நெல் புற்கள் போடப்பட்டிருந்தது. இதன் மீது ஏறி இறங்கிய கார் வாகனத்தின் முன் கீழ் பகுதியில் நெல்புற்கள் சிக்கிக் கொண்டு இருந்துள்ளது. இஞ்சின் சூடாக இருந்த பகுதியில் சிக்கிய புற்கள், திடீரென தீ பற்றி எரிந்தது. இதை கண்ட ஆரோக்கியம், கீழே இறங்கி பார்க்கும் பொழுது தீ பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தீ மள மளவென பற்றி வாகனம் முழுவதும் தீ பற்றி எரிந்தது.
உடனடியாக அருகில் உள்ள காட்பாடி தீயணைப்புத் துறையில் இருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அரை மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் வாகனம் முழுவதும் எரிந்து தீக்கிரையானது.
அதிர்ஷ்டவசமாக உடனடியாக காரில் இருந்த அனைவரும் இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து லத்தேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் சாலையில் போடப்பட்ட காய்ந்த புற்களால் வாகனத்தின் கீழ் பகுதியில் உள்ள இஞ்சினில் சிக்கிக் கொண்டு தீப்பற்றி கார் எரிந்துள்ளதாக தெரிவித்தனர். கார் தீ பற்றி எரிந்து தீக்கிரையான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.