மும்பையில் 6 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என வந்த தொலைபேசி அழைப்பை தொடர்ந்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மும்பையில் 1993ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 257 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 1400 பேர் படுகாயம் அடைந்தனர். சுமார் 27 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் நாசமாகின. அதனைத்தொடர்ந்து 2006ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் 180 பேர் பலியாகினர். சுமார் 800 பேர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் மும்பை போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், மாநகரில் 6 இடங்களில் வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டிருப்பதாகவும், அது குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் என தெரிவித்து இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். மர்ம தொலைபேசி அழைப்பு விடுத்தவரை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.