ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 29ஆம் தேதி தலைநகர் டெல்லியில் 48வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டெல்லியை அதன் சொந்த மண்ணில் கொல்கத்தா 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த 205 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அதிகபட்சமாக ரகுவன்சி 44, ரிங்கு சிங் 36, சுனில் நரைன் 27 ரன்கள் எடுத்தார்கள். டெல்லி அணிக்கு அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய டெல்லி அணிக்கு டு பிளேஸிஸ் 62, கேப்டன் அக்சர் படேல் 43, விப்ராஜ் நிகாம் 38 ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடினார்கள்.
கன்னத்தில் அறை:
ஆனால் இதர வீரர்கள் அதிரடி காட்டத் தவறியதால் 20 ஓவரில் டெல்லி 190/9 ரன்கள் எடுத்து தங்களுடைய 4வது தோல்வியை சந்தித்தது. கொல்கத்தா அணிக்கு அதிகபட்சமாக சுனில் நரைன் 3 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டநாயகன் விருதை வென்றார். முன்னதாக அந்தப் போட்டியின் முடிவில் வழக்கம் போல இரு அணி வீரர்களும் ஒருவரை ஒருவர் பேசிக் கொண்டனர்.
அந்த வகையில் கொல்கத்தா அணியின் இளம் வீரர் ரிங்கு சிங் மற்றும் டெல்லி அணியின் மூத்த வீரர் குல்தீப் யாதவ் ஆகியோர் பௌண்டரி எல்லை அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ரிங்கு சிங் கன்னத்தில் குல்தீப் யாதவ் சிரித்துக்கொண்டே விளையாட்டாக பளார் என்று அறைந்தார். அதை தவிர்க்க முயற்சித்தும் கடைசியில் ரிங்கு கன்னத்தில் அடி வாங்கினார்.
ரசிகர்கள் அதிருப்தி:
அதனால் “என்னப்பா பேசிக் கொண்டிருக்கும் போதே அடிக்கிறீங்க?” என்ற ரியாக்சன் வாடிப்போன ரிங்கு சிங் முகத்தில் வெளிப்பட்டது. மறுபுறம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்த குல்தீப் யாதவ் அடுத்த சில நொடிகளில் மீண்டும் ரிங்கு சிங் கன்னத்தில் அறையச் சென்றார். இருப்பினும் அம்முறை சுதாரித்துக் கொண்ட ரிங்கு நகர்ந்து கொண்டதால் அடியில் இருந்து தப்பினார்.
இதையும் படிங்க: கொல்கத்தா அணிக்கெதிராக நாங்க இவ்ளோ கிட்ட வந்த தோக்க இதுதான் காரணம் – அக்சர் படேல் வருத்தம்
அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது. அதைப் பார்க்கும் ரசிகர்கள் என்ன தான் நட்பாக இருந்தாலும் பேசிக் கொண்டிருக்கும் போதே இப்படி அடிக்கலாமா? என்று குல்தீப் மீது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். அத்துடன் ரிங்கு சிங் சோகமாகும் அளவுக்கு குல்தீப் அடித்ததால் அது நட்பு ரீதியான பேச்சாக இருக்காது என்றும் ரசிகர்கள் சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றனர்.