தமிழ்நாட்டு கடற்பரப்பைத் தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள 8 சிறு துறைமுகங்களை முழுமையாக தனியார் நிறுவனங்களிடம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு அளிக்கும் தமிழ்நாடு அரசின் முடிவு, கடலையேக் கூறுகட்டி விற்கும் கொடுஞ்செயலாகும்.
மீனவ மக்களின் கருத்துக்களைக் கேட்காமல், சுற்றுச்சூழலை நாசமாக்கி, மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்தொழிக்கும் திமுக அரசின் இக்கொடுங்கோன்மை திட்டம் எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் கட்டுப்பாட்டில் மொத்தம் 17 சிறு துறைமுகங்கள் உள்ளன. அவற்றில், செங்கல்பட்டு மாவட்டம் முகையூர், பனையூர், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கடலுார் மாவட்டம் சிலம்பிமங்களம், நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடி, தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு, மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி, கன்னியாகுமரி ஆகிய எட்டு இடங்களில் உள்ள சிறு துறைமுகங்களைத் தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டு, திமுக அரசு இணையவழி ஒப்பந்தங்களை வெளியிட்டுள்ளதால் மீனவ மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சிறு துறைமுகங்களைக் குத்தகைக்கு அளிப்பதன் மூலம், ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும், கடல்சார் வாரியத்திற்கு வருவாய் கிடைக்கும், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும் என்றெல்லாம் போலி பசப்பு வார்த்தைகளைக் கூறி மக்களை ஏமாற்றி, கடல் வளத்தையும், நிலத்தையும் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு நூற்றாண்டிற்குத் தாரைவார்ப்பது வருங்காலத் தலைமுறைக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும். தமிழ்நாட்டு மீனவப்பெருமக்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் கடற்பகுதியைத் தனியார் நிறுவனங்களிடம் கையளிப்பதன் மூலம், இனி அப்பகுதிகளில் மீனவ மக்கள் மீன் பிடிக்க முழுதாக அனுமதி மறுக்கப்படும். மேலும், கடல் சுற்றுலா, போக்குவரத்து, கப்பல் கட்டுமான தொழில், மீன் உணவு தொழில்களைத் துவங்குவதற்காக மீனவ மக்கள் காலங்காலமாக வாழ்ந்து வரும் வாழ்விடங்களை விட்டு அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கொடுமைகளும் அரங்கேற வழிவகுக்கும். ஏற்கனவே, வடசென்னையிலுள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை அதானி நிறுவனத்திற்குத் தாரை வார்த்துள்ளதன் மூலம் அப்பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை மீனவமக்கள் இழந்து நிற்கின்றனர். அதுமட்டுமின்றி மீன்பிடி தளங்களில் தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும் கட்டுமானங்களால் சுற்றுச்சூழல் சீர்கெட்டு, கடல்வாழ் உயிரினங்கள் அழிவதோடு, மீன்வளம் குறைந்து மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். ஏற்கனவே, ஆழ்கடலில் மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் நாள்தோறும் சிறை பிடிக்கப்பட்டு, அவர்களின் படகுகளும், உடைமைகளும் சேதமாக்கப்படும் கொடுமைகளால் பேரிழப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், கடற்கரைப் பகுதிகளும் துறைமுக மேம்பாடு என்ற பெயரில் தாரைவார்க்கப்பட்டால் மீனவர்கள் வாழ்வாதாரமே முழுவதுமாக அழிந்துவிடும்.
இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தென்தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் எரியெண்ணெய் மற்றும் எரிகாற்று எடுக்க அனுமதித்து, தமிழ்நாட்டின் கடல் வளத்தை நாசமாக்கத் திட்டமிட்டு வரும் நிலையில், அதனைத் தடுத்துநிறுத்த எவ்வித முயற்சியும் எடுக்காத திமுக அரசு, தன் பங்கிற்கு மீன்பிடி தளங்களையும், கடற்கரைப்பகுதிகளையும் தனியாருக்குத் தாரைவார்த்து அழிக்கத்துடிப்பது எவ்வகையில் நியாயம்? துறைமுகங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் குறித்து மீனவ மக்களிடம் திமுக அரசு கருத்துக்கேட்காதது ஏன்? வடவர்களை வேலையில் சேர்ப்பதையே வாடிக்கையாக வைத்துள்ள தனியார் நிறுவனங்கள், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு தரும் என்பதெல்லாம் அப்பட்டமான ஏமாற்றாகும். இந்திய ஒன்றிய பாஜக அரசின் நாசகார ‘சாகர்மாலா’ திட்டத்தின் ஒருகூறான துறைமுகங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் கொடுந்திட்டத்திற்கு துணைபோவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் திமுக அரசு மீனவ மக்களை முன்னேற்றும் முறையா? தனியார் நிறுவனங்களின் இலாப நோக்கத்திற்காக தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத பெருங்கொடுமையாகும். ஆகவே, கடல் வளங்களை அழித்து, மீனவ மக்களை வாழ்விடங்களை விட்டு வெளியேற்ற வழிவகுக்கும் கொடுந்திட்டமான, சிறு துறைமுகங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.