தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் ”மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நாகை மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் (ஜூலை 18) இரவு வருகை தந்த பழனிசாமி, கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து, 2-வது நாளாக நேற்று (ஜூலை 19) நாகையில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அங்கு அவர் பேசுகையில், ” தி.மு.க. ஆட்சியில் 4 அதிகார மையங்கள் உள்ளன. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்தோம். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டது.
உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, தமிழகத்திற்கு காவிரி நீரைப் பெற்று தந்தோம். மக்கள் விரும்பும் ஆட்சியில் அ.தி.மு.க. கொடுத்தது, அதனால் மக்கள் மத்தியில் எங்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது. விவசாய விரோத ஆட்சி மக்களுக்குத் தேவையா? 50 மாதங்களில் நாகை மாவட்டத்துக்கு ஏதேனும் பெரிய திட்டத்தை தி.மு.க. அரசு கொண்டுவந்ததா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.