நாமக்கல்லில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாநிலத் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்க்காதது சரியான முடிவு என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்துவிட்டதாகக் கூறிய அவர், நடிகர் திலகம் சிவாஜியை விடவும் ஓபிஎஸ் மிகப்பெரிய நடிகர் என்று சாடினார்.
அதிமுகவை அழிப்பதே ஓபிஎஸ்ஸின் நோக்கமாக இருந்ததாகவும், தற்போது அவர் திமுக பக்கம் சாய்ந்திருப்பது அதை உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், திமுக தனது தோல்வி பயத்தால் மற்ற கட்சிகளிலிருந்து நிர்வாகிகளை இழுத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தமிழகத்திற்கு ‘இரட்டை எஞ்சின்’ ஆட்சி முறைதான் தேவையென மக்கள் முடிவு செய்துவிட்டதாகக் குறிப்பிட்ட கே.பி.ராமலிங்கம், வரும் தேர்தலில் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே தங்களின் முக்கிய இலக்கு என்றார். அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்றும், மார்ச் 15-ம் தேதிக்குள் தொகுதிப் பங்கீடுகள் நிறைவு பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் முறையற்ற ஆட்சி நடப்பதால் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும், இதற்குத் தீர்வாக தேசிய தலைமையுடன் இணைந்த அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்றும் அவர் தனது பேட்டியில் வலியுறுத்தினார்.
