ஜோடோ யாத்திரையில் பங்கேற்க வந்த பிரியங்கா காந்திக்கு என்னாச்சு? மருத்துவமனையில் திடீர் அனுமதி!!
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக ராகுல் காந்தி மேற்கொண்டிருக்கும் பாரத் ஜோடோ யாத்திரையில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் சண்டௌலியில் ராகுல் காந்தி இன்று பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொள்ளும் நிலையில் அதில் தனது சகோதரரருடன் இணைந்து கொள்ள பிரியங்கா காந்தி திட்டமிட்டிருந்த போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில், “நான் இன்று உத்தரபிரதேசத்தில் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்க எதிர்நோக்கியிருந்தேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். குணமடைந்தவுடன் யாத்திரையில் பங்கேற்பேன்” என தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி எம்.பி, பீகார் வழியாக பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று மாலைக்கு மேல் உத்தரபிரதேசத்தில் யாத்திரையை தொடர்கிறார். உத்தரபிரதேச மாநிலத்தில் 16ஆம் தேதியில் இருந்து 21ஆம் தேதி வரையிலும், பின்னர் 24ஆம் தேதியில் இருந்து 25ஆம் தேதி வரையிலும் யாத்திரையை தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது