தமிழக சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் தமிழக பாஜக முக்கிய தலைவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். அண்ணாமலையை தவிர்த்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன், ஹெச். ராஜா, கேசவ விநாயகம் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் நிலவும் சிக்கல்கள் குறித்து தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். மேலும் அதிமுக கூட்டணி உடனான செயல்பாடு, உட்கட்சி பிரச்சனை உள்ளிட்டவை குறித்தும் பேசப்பட்டது.
சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவதை பாஜக தலைமை விரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசியலை விட்டு அண்ணாமலையை தூரமாக வைத்திருக்க வேண்டும் என அமித்ஷா கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல்களை களைய வேண்டும், கருத்து வேறுபாடுகளும் உட்கட்சி பூசல்களும் அதிகரித்து வருவது தமிழக பாஜக வளர்ச்சிக்கு நல்லதல்ல என்றும் அமித்ஷா நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். கட்சி நிர்வாகிகள் இடையே உள்ள வேறுபாடுகளை வெளிப்படையாக காட்ட வேண்டாம் என்றும், தேர்தலில் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்காமல், அவரை மத்திய பொறுப்பில் நியமிக்க உள்ளதாகவும் தமிழக பாஜக நிர்வாகிகளிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.