மாநிலங்களவை எம்.பி. தேர்தல் போட்டியிடுவதற்காக அதிமுக வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் இருந்து ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆறு இடங்களுக்கான தேர்தலில், தி.மு.க மூன்றிலும், மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் போட்டியிடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தி.மு.க சார்பில் போட்டியிடும் தற்போதைய எம்.பி.வில்சன், கவிஞர் சல்மா, முன்னாள் எம்.எல்.ஏ சிவலிங்கம், மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் இன்று முதலமைச்சர் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அலுவலகத்தில் பகல் 12 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இவர்களைத் தொடர்ந்து அ.தி.மு.க சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அவைத் தலைவர் தனபால் ஆகியோரும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இன்று மதியம் 12.45 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அலுவலகத்தில் உறுதிமொழியேற்று மனுதாக்கல் செய்தனர். அப்போது எதிர்க்கட்சி துணைத்தலைவர் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.