* சனாதன கொள்கைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் பிற்போக்குத் தனத்திற்கும் பேரிடியாக வந்து இறங்கியது தான் ‘குடிஅரசு’ இதழ்! குடிஅரசு இதழின் நூற்றாண்டு நிறைவை கொண்டாடும் விதமாக வெளியானதே இந்த நூல் !
* நூறாண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் உள்ளே இருந்து கொண்டு வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காக கடினமாகப் போராடிக் கொண்டிருந்த பெரியாரால் மே மாதம் 2ம் தேதி 1925ம் ஆண்டு ஈரோட்டில் கடலூர் ஞானியார் அடிகளைக் கொண்டு துவக்கப்பட்டது தான் ‘ குடிஅரசு ‘ வார ஏடு !
* நூறாண்டுகளுக்கு முன்னர் 02.05.1925 அன்று துவங்கப்பட்டு தொடர்ந்து வெளியாகி 1934, 1941, 1942, 1943 ஆகிய ஆண்டுகளில் நிறுத்தப்பட்டு மீண்டும் துவக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை சந்தித்தும் பல்வேறு சோதனைகளில் இருந்து மீண்டு தமிழக பத்திரிகை உலகில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி இறுதியில் 05.11.1949ல் குடிஅரசு நின்று போனது !
* குடிஅரசின் நூறாண்டுகள் வரலாற்றை மீண்டும் திருப்பிப் பார்க்க ஒரு அரிய வாய்ப்பாக இந்த நூலை ஆசிரியர் கி. வீரமணி அய்யா அவர்கள் நமக்கு தொகுத்து வழங்கியுள்ளார்கள் .
* ஆசிரியர் நூலின் முன்னுரையில்:
” குடிஅரசு ஓர் ஆழ்ந்த கருத்துக் கடல். அதில் முத்துக்களைக் கண்டறிய ” முத்துக் குளிக்க வாரீகளா ! ” என்று எனது வாசகர்களை அன்புடன் மகிழ்ச்சியுடன் அழைக்கிறேன். காரணம் இந்த முத்துக்கள்…அறிவின் சொத்துக்கள்…புரட்சியின் வித்துக்கள் அல்லவா ? ” ..என்று ஆர்வத்துடன் அழைப்பு விடுத்துள்ளார் !
* ஆசிரியர் இந்த நூலில் தொகுத்தளித்த முத்துக்களை நூலின் பொருளடக்கம் மூலம் புரிந்து கொள்ளலாம் ! அவை :
குடிஅரசு – ஏட்டின் தோற்றம்; எதிர்ப்பும் ஆதரவும்; கண்ட களங்கள்; ஆண்டு நிறைவுகளில் முக்கிய தலையங்கங்கள்; பிரவேசித்த துறைகள்; சந்தித்த வழக்குகள்; அலுவலகத்தில் சோதனையும் பெரியார் கைதும் … ஆகிய மொத்தம் 21 தலைப்புகளில் அரிய தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன !
* ஆசிரியர் அய்யா நூலுக்கு தலைப்பு வைத்தது போல, முத்துக் குளித்து அவர் எடுத்த வந்த முத்துக்களிருந்து ஒரு சில அரிய முத்துக்களை அதில் கிடைத்த தகவலுக்காக இங்கே உங்கள் பார்வைக்கு :
1) ஆரம்பம் முதல் 30.10.1943 வரை பெண்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் பாதி விலையில் குடிஅரசு இதழ் வழங்கப்பட்டது !
2) பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் 06.01.1935 தேதி முதல் ‘ பகுத்தறிவு ‘ இதழிலும் 13.01.1935 தேதி முதல் ‘ குடிஅரசு ‘ இதழிலும் நடைமுறைக்கு வந்தன !
3) குடிஅரசு இதழ் தனது கொள்கைகளாக பிரகடனப்படுத்தியவைகள் :
மக்களுக்குள் சுயமரியாதையும் சமத்துவமும் சகோதரத்துவமும் ஓங்கி வளர்தல் வேண்டும் !
உயர்வு தாழ்வு என்கின்ற உணர்ச்சி ஒழிந்து, அனைத்துயிரும் ஒன்றெண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும் ! சமயச் சண்டைகள் ஒழிய வேண்டும் !
4) குடிஅரசு எந்தெந்த விஷயங்களில் தனது கருத்துக்களை சொல்லி வந்தது என்பதை ‘ குடிஅரசு பிரவேசித்த துறைகள்’ என்ற தலைப்பில் தனியாக ஒரு பகுதி தரப்பட்டுள்ளது. அதில் பட்டியலிடப்பட்டவைகள் :
1) பார்ப்பனர் 2) அரசியல் 3) மதம் 4) கடவுள் 5) வேதம், சாஸ்திரம், இதிகாசம், புராணம் 6) சைவம், வைணவம், 7) காந்தியம் 8) பண்டைய ஒழுக்கங்கள், முறைகள், மூடப் பழக்க வழக்கங்கள் 9) செல்வ நிலைமை முதலாளி – தொழிலாளி முறை 10) ஆண், பெண் தன்மை . அநேகமாக அன்றைய தேவைக்கு வேண்டிய எல்லா தலைப்புகளிலும் கவனம் இருந்திருக்கிறது !
* குடிஅரசு இதழின் மிகப் பெரிய சிறப்பாகவும் மிகப் பெரிய பங்களிப்பாகவும் நான் கருதுவது என்னவென்றால், அதில் தொடர்ந்து எழுதிய அறிஞப் பெருமக்களின் மகத்தான பங்களிப்பு. தந்தை பெரியார் மட்டுமே தனது இதழில் எழுதி மக்களிடம் விற்கவில்லை. பல்வேறு துறையைச் சேர்ந்த அறிஞப் பெருமக்களைக் கொண்டு கட்டுரைகளை வழங்கினார் !
* 1935 முதல் 1949 வரை குடிஅரசு இதழில் அதிகம் எழுதிய பெருமக்களின் பெயர் பட்டியல் ஆண்டுகள் வாரியாக தொகுக்கப்பட்டு சிறப்பாக தரப்பட்டுள்ளன. அதன்படி ஏறக்குறைய 600 அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் பெயர்களை பட்டியலில் காண முடிகின்றது !
அவற்றிலிருந்து முக்கியமான முப்பது அறிஞர்களின் பெயர் பட்டியல் :
கைவல்யம் | பட்டுக்கோட்டை அழகிரி சாமி | பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் | தோழர் ம. சிங்காரவேலு | டாக்டர் ஆர். பி. பரஞ்சிபே | டாக்டர் அம்பேத்கர் | மு. அண்ணல் தங்கோ | மறைமலையடிகளார் | பாரதிதாசன் | சி. என். அண்ணாத்துரை | சர். பன்னீர் செல்வம் | எஸ். வி. காமத் | ரா. பி. சேதுப்பிள்ளை | பாவலர் பாலசுந்தரம் | தோழர் எம். என். ராய் | ஏ. பி. ஜனார்த்தனம் |
என். எஸ். கிருஷ்ணன் | சர் பி. டி. ராஜன் | மு. கருணாநிதி | மயிலை சீனி. வெங்கடசாமி | வாணி தாசன் | அரங்கண்ணல் | திரு. வி. கல்யாண சுந்தரம் | கா. அப்பாதுரை | மணியம்மை | எஸ். கருணானந்தம் | என்.வி. நடராஜன் | புலவர் முடியரசன் | புலவர் குழந்தை | மு. ராஜமாணிக்கம் |
* குடி அரசு ஒவ்வொரு ஆண்டை நிறைவு செய்த பின்னர் அதன் வளர்ச்சி, சவால்கள் பற்றிய சிறப்பு தலையங்கள், நிறைய தகவல்களை தருகின்ற முத்துக்களாக விளங்குகின்றன. இதழின் வளர்ச்சி மட்டுமல்ல அன்றைய தமிழகத்தின் நிலையையும் அறிந்து கொள்ளும் ஆவணமாக இருக்கின்றது !
* ஆசிரியர் அய்யா தனது முன்னுரையில் குறிப்பிட்டதிற்கு மேலாக – இந்த முத்துக்கள்…
இயக்கத்தின் சொத்துக்கள் ! தமிழகத்தின் வித்துக்கள் ! !
நீங்களும் அந்த முத்துக்களை ஒவ்வொன்றாக படித்துப் பயன் பெறுங்கள் !
நூற்றாண்டு கண்ட குடி அரசு : ஒரு முத்துக் குளியல்!
– கி. வீரமணி
– திராவிடர் கழக வெளியீடு
– முதல் பதிப்பு 2025
– பக்கங்கள் 240
– நன்கொடை – ரூ 250/
பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்.