சென்னைப் புத்தகக் காட்சியில் வெளியான சிறுகதை நூல். நண்பர் ஏக்நாத் எழுதிய ஏட்டி. தலைப்பிலேயே ஒரு பொடி வைத்திருக்கிறார்.
அதுவொரு விளிச்சொல். அதில் காதல் இருக்கிறது. செல்லமான இளக்காரமும் இருக்கிறது என்கிறார்.
பத்துக் கதைகள். ஒவ்வொரு நாளும் ஒரு கதையாக மெல்ல படித்துமுடித்தேன். நெல்லைத் தமிழ் கொஞ்சுகிறது.
ஊர் என்பது ஞாபகமாகவும் இருக்கலாம் என்று சொன்ன எழுத்தாளர் ஏக்நாத், ஊரை ஏன் எழுதுகிறேன் என்பதற்கும் முன்னுரையில் சில வார்த்தைகள் வைத்திருக்கிறார்.
“எப்பப் பாத்தாலும் ஊரு, கோயிலு, சாமின்னே எழுதிட்டிருக்கியே, வேறு ஒரு எழவையும் எழுதிய மாட்டியால? என்று செல்லமாகவும் கொஞ்சம் கோபமாகவும் விமர்சிக்கிறவர்களுக்காக, இதில் நகரம் சார்ந்த சில கதைகளையும் எழுதியிருக்கிறேன். ஆனாலும் எனக்குள் ஆழ்ந்து ஊறிக் கிடக்கும் ஊர் மற்றும் உள்ளூர் சாமிகளின் கதைகளும் இருக்கின்றன” என்கிறார்.
உண்மைதான். ஒரு நகரத்துக் கதையிலும் ஊர்தான் வருகிறது. ‘ஏட்டி’ கதையில் எதார்த்தமும் எள்ளலும் நிறைந்திருக்கிறது.
முதல் கதையான ‘அலைகளில் ஆடும் கடல்’ மண உறவுச் சிக்கல்கள், பெண் நட்பு, சந்தேகங்கள் என நவீன வாழ்வின் சிடுக்குகளைப் பேசுகிறது.
எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை ‘கல் இருக்கை’. கிராமத்தில் பழகித் திரிந்த நண்பர்களின் பிள்ளைகளுக்குள் வளரும் காதல்.
பின்னாளில் ஸ்டேட்டஸ் மற்றும் திடீர் வசதியால் மாறும் காதலனின் தந்தை. பேராசையால் வீழும் காதல். சிதையும் திருமணம் என காலத்தின் கதையை அழகாகச் சொல்கிறார்.
பொதுவெளியில் நமக்கு அறிமுகமான ஒரு முகத்தைப் பார்த்துவிட்டு, நீங்கள் அவரா எனக் கேட்போம். இல்லை என்பார். ஸாரி என்போம்.
அதுபோன்ற ஒரு சிறுகதைதான் முகம். மிக நுட்பமாகவும் கொஞ்சம் நகைச்சுவையாகவும் எழுதியிருக்கிறார்.
கதையின் கடைசி வரியில்கூட இன்னொரு கதை ஆரம்பிக்கிறது. ஒரு காதலால் நிற்கும் கோயில் கொடை பற்றிய கொட்டு என்ற கதையும் சுவாரசியமானது.
கதை என்பது வெறும் கதையல்ல. நிலத்தைப் பற்றிப் பேசுகிறது. தனித்துவமான தென்காசித் தமிழைப் பேசுகிறது. பண்பாட்டைப் பேசுகிறது.
மனிதர்களின் இயல்புகளைப் பேசுகிறது. வாழ்க்கைப் போக்கைப் பேசுகிறது. பலவீனங்களைப் பேசுகிறது.
இதெல்லாம் ஏக்நாத்தின் சிறுகதைகளில் அள்ள அள்ளக் குறையாமல் இருக்கிறது. ஊர் என்பது ஞாபகம். நிலம் என்பது மனிதர்கள்.
****
ஏட்டி (சிறுகதைத் தொகுப்பு)
நூலாசிரியர்: ஏக்நாத்
வெளியீடு: நெடில் பதிப்பகம்
விலை ரூ. 190/-
தொடர்புக்கு: 96003 98660
The post கதை என்பது நிலமும் மனிதர்களும்தான்! appeared first on Thaaii Magazine.
