வசந்த விழாவான சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது, உள்நாட்டுப் பயணங்களின் எண்ணிக்கை 47 கோடியே 40லட்சத்தை தாண்டியதோடு, சுற்றுலா பயணிகள் 63268.7 கோடி யுவான் செலவிட்டுள்ளனர்.
இவை, கடந்த ஆண்டில் இருந்ததை விட, முறையே 34.3விழுக்காடு மற்றும் 47.3விழுக்காடு அதிகமாகும். சீனப் புத்தாண்டு விழாவின் நுகர்வுச் சந்தை புதிய ஆண்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு நல்ல துவக்கப் புள்ளியைக் கொண்டு வந்துள்ளது.
மேலும், இவ்வாண்டின் வசந்த விழா ஐ.நா விடுமுறைப் பட்டியலில் முதன்முறையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
உலகளவில் சுமார் ஐந்தில் ஒரு பகுதியினர் பல்வேறு வழிமுறைகளின் மூலம் புத்தாண்டினை வரவேற்றுக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். விசா விலக்கு, சுங்க அனுமதிக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், விமான வழித்தடங்கள் மீண்டும் தொடங்குவது முதலிய சாதகமான கொள்கைகளின் உதவியால் அதிகமான சீனப் பயணிகள் வெளிநாட்டில் சுற்றுலா பயணம் மேற்கொண்டு பல்வேறு நாடுகளின் சுற்றுலா துறையைப் பெரிதும் தூண்டியுள்ளனர்.
இதனிடையில், ஜனவரி மாதத்தின் இறுதியில் சர்வதேச நாணய நிதியம் 2024ஆம் ஆண்டு சீனப் பொருளாதார வளர்ச்சி பற்றிய முன் மதிப்பீட்டை 0.4விழுக்காடு உயர்த்தி 4.6விழுக்காடாக அறிவித்துள்ளது.
தற்போது, சீனப் பொருளாதாரம் அறைகூவல்களை எதிர்கொண்டாலும், நீண்டகாலப் பார்வையில் அதன் சீரான வளர்ச்சிப் போக்கு மாறவில்லை. 2024ஆம் ஆண்டு சீனப் பொருளாதாரம் தொடர்ந்து சீராக வளர்ந்து உலகத்துக்குத் தொடர்ந்து பங்காற்றும் என்னும் நம்பிக்கை உண்டு.