கூட்டணி ஆட்சி அமையும்போதுதான் அதன் நிறை, குறைகள் தெரியும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “மதுரை மாநாட்டில் தவெக தொண்டரை பவுன்சர்கள் கீழே தூக்கி வீசிய விவகாரத்தில், வேண்டும் என யாரும் இந்த செயலை செய்யப்போவது கிடையாது. மாபெரும் கூட்டம் இருக்கும்போது இப்படி நடப்பது சகஜம் தான். எம்ஜிஆருக்கு பிறகு மக்கள் தலைவர் என்றால் கேப்டன் விஜயகாந்த் தான். அவர் பெயரை சொல்லாமல் யாரும் பேச முடியாது. ரஜினிக்கு முதலில் வாழ்த்து சொன்னது நான் தான்.. கேப்டன் இருந்திருந்தால் அவருக்கு நிச்சயம் விழா எடுத்திருப்பார்.
கூட்டணி ஆட்சி அமையும்போதுதான் அதன் நிறை, குறைகள் தெரியும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும்போதுதான் ஆட்சியை சிறந்த ஆட்சியாக மக்கள் ஏற்றுக்கொள்வர்.
தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்பதை ஜன. 9ஆம் தேதி அறிவிப்போம். சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. அங்கம் வகிக்கும் அணிதான் வெற்றி பெறும்” என்றார்.