25 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர் நியமனம் செய்ய தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கட்சிகள் மும்முரமாக அரசியல் களமாட ஆயத்தமாகி வருகின்றனர். அந்தவகையில் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காகக்கொண்டு தீவிரமாக கட்சியை வலுப்படுத்தி வருகிறது. அண்மையில் மதுரையில் கழகத்தின் 2வது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு வந்த தவெக தலைவர் விஜய்., அடுத்ததாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தில் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு ஒன்றிய செயலாளர் இருந்த நிலையில், தற்போது 25 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர் நியமனம் செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு தலைமை உத்தரவிட்டுள்ளது. கட்சியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் முறையாக தற்போது வரை நடைபெறாத நிலையில் ஒன்றிய செயலாளர்களை நியமித்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் வாக்கு சாவடிக்கு, சம்பந்தமே இல்லாத நபர்களை கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களாக நியமனம் செய்திருந்த நிலையில் பூத் முகவர்களை முறையாக நியமனம் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த புதிய ஒன்றிய செயலாளர் பொறுப்புக்கு ஆட்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதனை விஜய் சுற்று பயணத்தை தொடங்குவதற்குள் ஒன்றிய செயலாளர்கள் நியமனத்தை முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விஜய்யின் சுற்று பயணம் தொடர்பாக நேற்று பனையூர் அலுவலகத்தில் 20 மாவட்ட செயலாளர்களுடன் பொதுச் செயலாளர் என். ஆனந்த் நடத்திய ஆலோசனையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.