தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
தென்காசியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோயிலில் கடந்த 5ஆம் தேதி ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் காசி விஸ்வநாத சுவாமிக்கும், உலகம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வெகுவிமரிசையாகத் தொடங்கியது. சிறப்பு அலங்காரத்தில் உலகம்பாள் திருத்தேரில் எழுந்தருளிப் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அப்போது, பன்னிரு திருமுறை நூல்களைத் தலையில் சுமந்த படியும், திருவாசகம் பாடிக்கொண்டும் ஏராளமான பக்தர்கள் தேரின் முன்னே ஊர்வலமாகச் சென்றனர்.
தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
