சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங், ரங்போ மைதானத்தில் நடைபெற்ற இசைப் போட்டியின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டபோது, அவருக்கு திடீரென மூக்கில் ரத்தக் கசிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காகக் கேங்டாக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து முதல்வரின் மூத்த மகனும், எம்.எல்.ஏ.வுமான ஆதித்யா கூறுகையில், “முதல்வருக்கு மூக்கில் ரத்தப்போக்கு ஏற்பட்ட வரலாறு இருந்தாலும், சாத்தியமான அபாயங்களைத் தவிர்ப்பதற்காக அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பிறகு அவர் நன்றாகக் குணமடைந்து வருகிறார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. மேலும், சிக்கல்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அவர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்; விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்று தெரிவித்தார்.
