சீனர்களின் 9-9-6 ஃபார்முலா கைகொடுக்குமா? : வாரத்திற்கு 72 மணி நேர வேலை – நாராயண மூர்த்தி மீண்டும் அட்வைஸ்!

Estimated read time 1 min read

இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 72 மணி நேரம் என அயராது உழைத்தால், பொருளாதார வளர்ச்சியில் சீனாவை பின்னுக்கு தள்ளலாம் என்று யோசனை தெரிவித்திருக்கிறார் இன்போசிஸ் நிறுவனத் தலைவர் நாராயணமூர்த்தி… அவரது கருத்து இளைஞர்களிடயே மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

வாரத்திற்கு 6 நாட்கள் வேலை என்ற தனது கருத்தை கல்லறை வரை கொண்டு செல்வேன் என்று கூறியவர்தான் 79 வயது பில்லியனரும், இன்போசிஸ் நிறுவன தலைவருமான நாராயண மூர்த்தி…. இந்தியர்கள் வாரம் 70 மணி நேரம் கடினமாக உழைக்க வேண்டும் என்று 2023ம் ஆண்டு அவர் கூறிய கருத்து, இளைஞர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

இந்தச் சூழலில் அண்மையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த நாராயண மூர்த்தி, இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 72 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்… தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், சீனர்களிடை யே 9-9-6 என்ற ஃபார்முலா, நடைமுறையாக மாறிய காரணத்தால், அந்நாட்டின் வளர்ச்சி புதிய பாய்ச்சலில் உள்ளதாகக் கூறியுள்ளார்.

இதே போன்று இந்திய இளைஞர்களும் வாரத்திற்கு 72 மணி நேரம் அயராது உழைத்தால் இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். சீனா கடந்த சில தசாப்தங்களாக தேசத்தைக் கட்டமைப்பதில் வேகமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறிய நாராயண மூர்த்தி, வாரத்திற்கு 6 நாட்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை என்ற விதியைக் கடைபிடித்ததன் மூலம் சீனாவின் ஐ.டி. நிறுவனங்கள் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

9-9-6 என்ற பிரபலமான உத்தி, சீனா ஐ.டி. நிறுவனங்களை, குறிப்பாக அலிபாபா, ஹவாய் போன்ற நிறுவனங்களுக்குப் பூதாகரமான வளர்ச்சியைக் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் இந்த ஃபார்முலா உயர் மன அழுத்தம், பணியில் சோர்வு, மோசமான வாழ்க்கை சமநிலை போன்ற பாதிப்பைப் பணியாளர்களுக்கு ஏற்படுத்தியதால், வாரத்திற்கு 72 மணி நேர வேலை என்பது சட்டவிரோதம் எனச் சீன உச்சநீதிமன்றம் கண்டித்திருந்ததை அவர் குறிப்பிட தவறவில்லை.

எனினும், இந்திய இளைஞர்கள் 9-9-6 என்ற ஃபார்முலாவை கடைபிடித்து, கடுமையாக உழைக்கத் தயாராக வேண்டும் என்று வலியுறுத்திய நாராயண மூர்த்தி, வாழ்க்கை சமநிலை குறித்து கவலைப்படுவதை விட்டுவிட்டு, ஒவ்வொரு தனிநபரும் தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

உற்பத்தியிலோ அல்லது பிற துறைகளிலோ இந்தியா சீனாவை யதார்த்தமாக முந்த முடியுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த மூர்த்தி, அது சாத்தியம் என்று தான் நம்புவதாகவும், ஆனால் தொடர்ச்சியான முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும் என்றும் கூறினார். இந்தியா தற்போது 6.57 சதவிகித பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ள நிலையில், இது நியாயமான வளர்ச்சி என்றே தாம் நம்புவதாகவும், ஆனால் ஆறு மடங்கு பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவை எட்டிப்பிடிக்கச் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் அசாதாரண அர்ப்பணிப்பு தேவை என்று குறிப்பிட்டார்.

ஒவ்வொருவரும், தங்களது உழைப்பின் மீது உயர்ந்த எண்ணங்களை விதைத்தால் மட்டுமே முன்னேற்றம் வரும் என்றும் கூறிய அவர், நமது சொந்த செயல்களுக்கு உயர்ந்த அளவுகோல்களை நிர்ணயித்தால், அது நாட்டின் வளர்ச்சியில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

சீனாவின் உற்பத்தித்திறன் அணுகுமுறையை மேற்கோள் காட்டிய அவர், நாடு இதே வேகத்தில் முன்னேற வேண்டுமென்றால் இளம் இந்தியர்கள் கடினமாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அவரது கருத்து இணையத்தில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், அவரது நோக்கத்தில் உள்ள உண்மையை மறுப்பதற்கில்லை.

Please follow and like us:

You May Also Like

More From Author