அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான செங்கோட்டையன், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுகவின் ஒருங்கிணைப்பு குறித்து முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். “ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது நல்ல முடிவாக இருக்கும்,” என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
மேலும், அவர் டெல்லி சென்று பா.ஜனதா தலைவர்களை நேரில் சந்தித்தது குறித்துப் பேசிய செங்கோட்டையன், “பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டன. அதனை இங்கு பகிர்வது அரசியல் நாகரிகமாக இருக்காது,” என்று குறிப்பிட்டார். பா.ஜனதா தரப்பில் அழைக்கப்பட்ட பிறகே டெல்லி சென்றதாகக் கூறிய அவர், மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவது குறித்த முடிவை தலைமைதான் எடுக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தினார்.
மேலும், டி.டி.வி.தினகரனுடன் இணைந்து நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “கூட்டணி குறித்த எந்த கருத்தும் சொல்ல இயலாது,” என்று செங்கோட்டையன் பதிலளித்தார். இருப்பினும், “எல்லோரும் ஒருங்கிணைய வேண்டும் என்பதே ஆசை. அந்த ஆசை நிறைவேறும் காலம் வெகுவிரைவில் உள்ளது,” என்று குறிப்பிட்டார். இறுதியாக, அதிமுகவின் ஒருங்கிணைப்பு நடைபெறுவது குறித்து, “பொறுத்திருந்து பாருங்கள்,” என்று கூறி, தமிழக அரசியலில் விரைவில் ஒரு பெரிய மாற்றம் நிகழவுள்ளதை சூசகமாக உணர்த்தினார்.
