தமிழகத்தில் உள்ள அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் நீக்கப்பட்டு வருவது குறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
1996-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை போக்குவரத்து கழகங்களுக்கு மன்னர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருந்த நிலையில், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அந்தப் பெயர்களை நீக்கிவிட்டு ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என மாற்றினார்.
ஆனால், தற்போது ஸ்டாலின் தலைமையிலான அரசு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பேருந்துகளில் இருந்து ‘தமிழ்நாடு’ என்ற வார்த்தையை மறைமுகமாக நீக்கி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
புதிதாகக் கட்டப்படும் பேருந்து நிலையங்களுக்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்’ எனப் பெயர் சூட்டி வருவதைத் தொடந்து, போக்குவரத்து கழகத்திற்கும் ‘கலைஞர் அரசுப் போக்குவரத்துக் கழகம்’ எனப் பெயர் மாற்றும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகத்தை அவர் எழுப்பியுள்ளார்.
திராவிட மாடல் அரசு தமிழ் விரோதப் போக்கைக் கடைப்பிடிப்பதாகவும், முன்னோர் பெயர்களை மறைத்துவிட்டு தன் குடும்பப் பெயர்களை நிலைநிறுத்த முயற்சிப்பதாகவும் எச்.ராஜா தனது சமூக வலைதளப் பதிவில் விமர்சித்துள்ளார்.
