தமிழக அரசியலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கு அடுத்தபடியாக தமிழக வெற்றிக் கழகம் (TVK) மூன்றாவது முக்கிய சக்தியாக உருவெடுக்கும் என ‘பாராவீல்’ ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த தொழில்நுட்பம் சார்ந்த அரசியல் நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் தேர்தல் கணிப்பு நிறுவனமாகிய கே.கே. சர்வீஸ் அண்ட் ஸ்ட்ரேட்டஜிஸ் பிரைவேட் லிமிடெடின் (KK Surveys & Strategies Pvt Ltd) ஒரு அங்கமான – பாராவீல் (Parawheel) நிறுவனம், தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கருத்துக்கணப்பு நடத்தியது. இதுவரை 70 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முதற்கட்ட முடிவுகளின்படி, தி.மு.க. 41.5%, அ.தி.மு.க. 36.2%, த.வெ.க. 13.6% மற்றும் நா.த.க. 7.9% வாக்கு விகிதங்களைப் பெறும் என இந்நிறுவனம் கணித்துள்ளது.
தமிழகத்தில் த.வெ.க. மூன்றாவது முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் 30,000 வாக்காளர்களைக் கொண்டு இந்த விரிவான கருத்துக்கணிப்பை பாராவீல் நிறுவனம் நடத்தியுள்ளது.
வாக்காளர் மனநிலை பகுப்பாய்வு, வாக்குச்சாவடி அளவிலான கள ஆராய்ச்சி மற்றும் தரவு சார்ந்த அரசியல் நுண்ணறிவு ஆகியவற்றை கொண்டு இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்நிறுவனம், ஏற்கனவே 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்கள், 2024 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் போன்றவற்றில் மிகத் துல்லியமான கணிப்புகளை வழங்கி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது.
சென்னை நகரில், பல தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான பலத்தைக் கொண்டுள்ளதுடன், தி.மு.க.விற்கு அடுத்தபடியாக இரண்டாவது வலுவான அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறது. பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க. தொடர்ந்து முதலிடத்தில் நீடித்தாலும், இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் த.வெ.க. குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்று முன்னிலையில் இருப்பதை இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன.

இதுகுறித்து, செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாராவீல் (Parawheel) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரண் கொண்டெட்டி (Mr. Kiran Kondeti), “சென்னை, கோவை, டெல்டா – தெற்கு – வடக்கு – மேற்கு தமிழகம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் நிலவும் வாக்காளர்களின் மனநிலை குறித்த ஆய்வுகளில் எங்களது ஆராய்ச்சி கவனம் செலுத்துகிறது. அத்துடன் சாதிக் கூட்டணிகள், ஆட்சி குறித்த பார்வை மற்றும் ஆட்சிக்கு எதிரான அலைகள் குறித்த விரிவான பகுப்பாய்வுகளும் இதில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் முதன்முறை வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் மற்றும் வெற்றி வாய்ப்பை மாற்றியமைக்கும் தொகுதிகளின் பங்கு குறித்து எங்களது ஆய்வு ஆராய்கிறது. குறிப்பாக, த.வெ.க. – விஜய் காரணி குறித்து ஒரு சிறப்புப் பகுப்பாய்வு செய்யப்பட்டது; இதில் ரசிகர்கள் வாக்காளர்களாக மாறுவது, இளைஞர்களைத் திரட்டுவது மற்றும் தி.மு.க, அ.தி.மு.க போன்ற முக்கியக் கட்சிகளின் வாக்கு வங்கியில் இது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.
பொதுவாகக் கட்சித் தலைமையகங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த ‘வார் ரூம்’ (War Room) மாடலை, ஒவ்வொரு தொகுதியிலும் எங்களது வாடிக்கையாளராக இணையும் வேட்பாளருக்கு ‘ஒரு வேட்பாளர் – ஒரு வார் ரூம்’ என்ற முன்னெடுப்பின் மூலம் விரிவுபடுத்தியுள்ளோம். இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பிரத்யேகத் தேர்தல் பரப்புரைக்கான வார் ரூம்களை நாங்கள் அமைத்துக் கொடுப்போம். இந்த வார் ரூம்கள் தேர்தல் காலம் முழுவதும் எங்களிடம் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு வேட்பாளருக்கும் உடனுக்குடனான வாக்காளர் தரவுகள், வாக்குச்சாவடி பகுப்பாய்வு மற்றும் தேர்தல் பரப்புரை உத்திகளுக்கான ஆதரவை வழங்கும். எங்களது தொகுதி அளவிலான அரசியல் நுண்ணறிவுச் சேவைகளின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 5,000 நடுநிலை வாக்காளர்களின் தரவுத்தளத்தை வேட்பாளர்களுக்கு பாராவீல் வழங்க முடியும். இது ஊசலாடும் வாக்காளர் பிரிவுகளை வேட்பாளர்கள் சிறப்பாகப் புரிந்து கொள்ளவும், தேர்தல் பரப்புரைகளின் போது அதற்கேற்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அணுகுமுறை உத்திகளை வடிவமைக்கவும் உதவும்.
பாராவீல் நிறுவனத்தில், எங்களது ஆராய்ச்சி மற்றும் தரவுகளின் நம்பகத்தன்மை மற்றும் துல்லியத்தின் மீது நாங்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம். வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட தரவுகள் அல்லது முன்னறிவிப்புகளில் ஒரு சதவீதத்திற்கு (1%} மேல் வேறுபாடு இருந்தால், தரவுகளைப் பெற்ற வேட்பாளர்களுக்கு அவர்கள் செலுத்திய முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும். இது எங்கள் ஆய்வின் பின்னணியில் உள்ள அறிவியல் வழிமுறைகளின் மீதான நம்பிக்கையையும், எங்களது வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையில் நிறுவனத்திற்கு இருக்கும் உறுதியையும் காட்டுகிறது,” என்று கூறினார். ஆந்திரப் பிரதேசம் முதல் மகாராஷ்டிரா வரை – முக்கிய தேர்தல் கணிப்புகளில் பேராவீல் (Parawheel) நிறுவனத்தின் நிரூபிக்கப்பட்ட துல்லியம்
✓ 2019 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், முடிவுகள் வெளியாவதற்கு முன்பே தேர்தல் போக்குகளை பேராவீல் துல்லியமாக கணித்தது.
✓ 2024 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், பல தேசியக் கணிப்பு நிறுவனங்கள் தேர்தல் போக்கைக் கண்டறியத் தவறிய நிலையில், தெலுங்கு தேசம் – ஜனசேனா – பா.ஜ.க. கூட்டணியின் பிரம்மாண்ட வெற்றியை இந்நிறுவனம் மிகத் துல்லியமாக முன்கூட்டியே அறிவித்தது.
✓ அதேபோல், 2024 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலிலும், இறுதி முடிவுகளுக்கு முன்னதாக துல்லியமான அரசியல் போக்கு ஆய்வுகளை வழங்கி, நம்பகமான தேர்தல் ஆராய்ச்சி மற்றும் கணிப்புகளுக்கான தனது நற்பெயரை மேலும் வலுப்படுத்தியுள்ளது” என்றார்.
