தமிழக காங்கிரஸ் கட்சியில் நிலவும் உட்கட்சி மோதல்கள் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையே தேர்தல் ஆணையத்திற்கு முகவர் பட்டியல் கொடுக்க விடாமல் தடுக்கும் அளவுக்குக் கட்சிக்குள் சிலரின் சுயநலம் ஆதிக்கம் செலுத்துவதாக ஜோதிமணி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். மதவாத மற்றும் பிரிவினைவாத சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டைப் பாதுகாக்க வேண்டிய முக்கிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் நிலையில், மக்கள் பிரச்சினைகளைப் பேசாமல் வெறும் பிளவுவாத அரசியலில் ஈடுபடுவது துரதிர்ஷ்டவசமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்த ஒரு அரசியல் கட்சியும் ,தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை,தேர்தல் நேரத்தில்,தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச் சாவடி முகவர் பட்டியலை கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என்று நினைக்காது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது.
தமிழ்நாடு காங்கிரசில் நடைபெறும் விசயங்கள் மிகுந்த கவலை…
— Jothimani (@jothims) January 2, 2026
மேலும், ராகுல் காந்தியின் கொள்கைப் பிடிப்புள்ள அரசியலுக்கு நேர்மாறான பாதையில் தமிழக காங்கிரஸ் பயணிப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராசர் மற்றும் நேரு-காந்தி குடும்பத்தின் தியாகத்தால் உருவான இந்த நற்பெயரை, ஒரு சிலரின் சுயநலத்திற்காக அழிவின் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டாம் என்றும், உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது என்றும் அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
