தென் கொரிய அரசுத் தலைவர் லீ ஜே-ம்யுங், தனது 2026ஆம் ஆண்டின் முதல் பயணம் விரைவில் சீனாவில் மேற்கொள்ள உள்ளார்.
இப்பயணத்தை முன்னிட்டு, அவர் தென் கொரியாவில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தற்போது சர்வதேச சூழ்நிலை பதற்றமாக உள்ளது.
சில நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகள் தீவிரமாகி வருகின்றன. இந்நிலையில், சீனாவுடனான உறவு தென் கொரியாவுக்கு மிகவும் முக்கியமானது என்றார். மேலும், இரு நாடுகளுக்கிடையிலுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் முரண்பாடுகளைக் குறைப்பது அல்லது நீக்குவதும், இரு நாடுகள் ஒன்றுக்கொன்று ஆதரவு மற்றும் வளர்ச்சியின் அடிப்படையில் உறவை உருவாக்குவதும், இப்பயணத்தின் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இரு நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக வளர்ச்சி குறித்து அவர் மேலும் கூறியதாவது, தென் கொரியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவு மிகவும் நெருங்கியது. தற்போது, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் தலைமையில், சீனப் பொருளாதாரம் பெரும் முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. தொழில் நுட்பம் மற்றும் மூலதனம் துறையில், சீனா முன்னணியில் உள்ளது. இந்நிலையில், இரு நாடுகள் சமத்துவமான ஒத்துழைப்புகளின் மூலம், இரு தரப்புகளின் வளர்ச்சிக்கு உறு துணையான ஒத்துழைப்புத் தன்மையுடைய உறவை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஒரே சீனா என்ற கோட்பாட்டை தென் கொரியா எப்போதுமே பின்பற்றி வருகிறது. வட கிழக்காசியாவிலும், தைவான் உள்ளிட்ட சுற்றுப்புறப் பிரச்சினைகளிலும், அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காப்பது, தென் கொரியாவைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
