சீனாவுடனான பொருளாதாரத் தொடர்பைத் துண்டிப்பது மட்டுமின்றி, ரஷியா, ஈரான் மற்றும் கியூபாவுடன் உறவை துண்டிக்க வேண்டும் என்றும், எண்ணெய் உற்பத்தித் துறையில் அமெரிக்காவுடன் மட்டுமே ஒத்துழைப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் வெனிசூலா நாட்டின் தற்காலிக அரசுத் தலைவரிடம் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் ஜனவரி 7ஆம் நாள் கூறுகையில், வெனிசூலா, அரசுரிமை கொண்ட ஒரு நாடாகும். அமெரிக்காவின் ஆதிக்கச் செயல்கள், சர்வதேச சட்டத்தைக் கடுமையாக மீறியதோடு, வெனிசூலாவின் அரசுரிமைக்கு ஊறுபடுத்தி, அந்நாட்டின் மக்களின் உரிமையைச் சீர்குலைத்துள்ளன. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், சீன-வெனிசூலா ஒத்துழைப்பு, அரசுரிமை கொண்ட நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது சர்வதேச சட்டம் மற்றும் இரு நாட்டுச் சட்டங்களால் பாதுகாக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
தவிரவும், வெனிசூலா அரசுத் தலைவர் மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா உடனடியாக விடுவித்து, பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என சீனா மீண்டும் வேண்டுகோள் விடுப்பதாக மாவ்நிங் தெரிவித்தார்.
