பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிய உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவால், ஏற்கெனவே தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்துவரும் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டி உள்ளது. இவர்களுக்காகஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு நடத்துவதற்கும் பள்ளிக் கல்வித் துறையில் திட்டமிட்டிருந்தது.
அப்போது ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு மதிப்பெண்கள் குறைப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஏற்கெனவே ஆசிரியர் பணியில் உள்ளவர்கள் தகுதித் தேர்வில் தங்களுக்கான தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும் பிற மாநிலங்களில் உள்ளது போல் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும் மதிப்பெண் தளர்வும் வழங்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிவுடன் நடைபெற்ற கூட்டத்திலும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அரசு செயலாளர் சந்திரமோகன் இன்று அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், ‘பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 60% அல்லது 90 மதிப்பெண்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ‘பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ,சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 50 சதவீதம் அல்லது 75 மதிப்பெண் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் அருந்ததியினர் பிரிவு தேர்வர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 40 சதவீதம் அல்லது 60 மதிப்பெண் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெற்ற தேர்வு எழுதிய தேர்வுகளுக்கும், ஆசிரியர்களாக தொடர்வதற்கு தகுதி தேர்வு எழுத உள்ள ஆசிரியர்களுக்கும் இந்த அரசாணை பொருந்தும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு என்சிஇஆர்டி வெளியிட்ட அரசாணையின்படி, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவோருக்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் என்பது, பொதுப்பிரிவிற்கு 60 சதவீதம் அல்லது 90 மதிப்பெண் என இருந்தது.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், அருந்ததியர், இஸ்லாமியர் மற்றும் மாற்று திறனாளிகள் என இட ஒதுக்கீட்டு பிரிவு தேர்வர்களுக்கு, 55 சதவீதம் அல்லது 82.5 மதிப்பெண் என குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணாக இருந்தது.
இதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும் தேர்வர்களின் கோரிக்கை அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அரசுக்கு அனுப்பிய பரிந்துரைகள் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை அதனை அரசாணையாக வெளியிட்டுள்ளது.
