லெபனான் வாக்கி டாக்கி வெடிப்பு! 32 பேர் பலி 3000க்கும் அதிகமானோர் படுகாயம்!

பெய்ரூட்: லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் நேற்று ஒரே நேரத்தில் பல இடங்களில் வாக்கி-டாக்கிகள், மற்றும் சூரிய மின் சக்தியால் இயங்கும் சில உபகரணங்கள் வெடித்து சிதறியுள்ளது. இதில் 32 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று முன்தினம் லெபனானில் பேஜர்கள் வெடித்தச் சம்பவத்தை தொடர்ந்து நேற்றைய தினமும் அதே போல் வாக்கி-டாக்கிகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வெடித்துச் சிதறி இருக்கிறது. வெடித்து சிதறியுள்ள இந்த வாக்கி டாக்கிகள் எல்லாமே ஈரான் ஆதரவு கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக நேற்று முன்தினம் பேஜர் தாக்குதலில் உயிரிழந்த ஹிஸ்புல்லா இயக்கத்தைச் சேர்ந்தவரின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் நேற்று ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறிய வாக்கி டாக்கிகளில் ஒன்று அங்கும் வெடித்து சிதறியுள்ளது.

பேஜர், வாக்கி-டாக்கி என அடுத்தடுத்து இது போன்ற தாக்குதல்கள் நடந்ததற்கு இஸ்ரேல் தான் காரணம் என லெபனான் அரசு கூறி வருகிறது. மேலும், இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் எனவும் கூறிவருகிறது. இதற்கு இஸ்ரேல் எந்த பதிலும் கூறாமல் மௌனம் சாதித்து வருகிறது.

ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலின் கண்காணிப்பில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவே இது போன்ற பழைய தொழில்நுட்ப உபகரணங்களான பேஜர்கள், வாக்கி டாக்கிகளை போன்றவற்றை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அதே நேரம் நேற்று வெடித்துச் சிதறிய இந்த வாக்கி டாக்கிகள் அனைத்துமே 5 மாதங்களுக்கு முன் வாங்கப்பட்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

மேலும், இது அனைத்தும் தைவான் நாட்டின் தயாரிப்பு என்று ஒரு புறம் கூறப்பட்டாலும் தைவான் அரசு இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இருந்தாலும் இந்தத் தாக்குதலின் பின்னால் இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பான மொசாட் இருப்பதாக பிரபல ஊடகங்களால் கூறப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author