டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பதவிகளுக்கான மெயின் தேர்வு (பொது அறிவுத் தாள்) பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான ஹால்டிக்கெட் தற்போது அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தங்களது ‘ஒருமுறை பதிவு’ (OTR) பக்கத்திற்குச் சென்று, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவிட்டு ஹால்டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கட்டாய தமிழ் மொழித் தகுதித் தாள் தேர்வு பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறுவதாக இருந்து, தேர்வு மைய ஒதுக்கீடு உள்ளிட்ட குளறுபடிகளால் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் தேர்வர்கள் கடும் அதிர்ச்சியில் இருந்தனர். தற்போது அந்தத் தமிழ் தகுதித் தேர்வு மார்ச் மாதம் 15-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி பொது அறிவுத் தாள் தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என்பதால், தேர்வர்கள் எவ்விதக் குழப்பமும் அடையாமல் ஹால்டிக்கெட்டை டவுன்லோட் செய்து தேர்வுக்குத் தயாராக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
