அஜர்பைஜான் அரசுத் தலைவர் அலியேவ் அண்மையில் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது, சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார். இப்பயணத்தில், பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவின் உருவாக்கம் பற்றிய கூட்டறிக்கையில் இரு நாடுகள் கையொப்பமிட்டன. இது குறித்து அவர் கூறுகையில், தத்தமது மைய நலன்களுடன் தொடர்புடைய விவகாரங்களில் இரு நாடுகள் ஒற்றுமையுடன் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, தத்தமது அரசுரிமை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டைப் பேணிக்காப்பதற்கு உறுதியுடன் ஆதரவளித்து வருகிறது என்றார். மேலும், வர்த்தகம், போக்குவரத்து மற்றும் ஏற்றியிறக்கல், மானிடப் பண்பாட்டியல் பரிமாற்றம், மனித நேய ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அம்சங்களும் இந்தக் கூட்டறிக்கையில் இடம்பெற்றன. அஜர்பைஜானைப் பொறுத்தவரை, சீனாவுடன் இத்தகைய கூட்டறிக்கையில் கையொப்பமிட்டது, ஒரு பெரிய சாதனையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
பசுமை எரியாற்றல் துறையிலுள்ள ஒத்துழைப்பு குறித்து அவர் கூறுகையில், புதுப்பிக்கவல்ல எரியாற்றல் துறையில், இரு நாடுகள் மதிப்புள்ள ஒத்துழைப்பு வாய்ப்புகளைக் கொண்டுள்ளன. இது, அஜர்பைஜானின் வளர்ச்சி நெடுநோக்கிற்கும், சீனா ஆதரிக்கின்ற பசுமையான வளர்ச்சிக்கும் ஏற்றதாகும் என்றார்.
தவிரவும், உலக தென் பகுதியின் நாடுகளான சீனாவும், அஜர்பைஜானும், பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவின் வழிக்காட்டலுடன், பலதரப்பு துறைகளில் உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு மேலதிக பங்காற்றும் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.