காந்திக்கு எவ்வளவு புகழ் மாலைகள் சூட்டப்பட்டனவோ, அவ்வளவு கண்டன விமர்சனங்கள், பழிப்புகள், வசவுகளும் வந்தன.
தேசப்பிதா என்கிற அழைப்புகளும் இருந்தது. பத்தாம்பசலி, ரீஆக்ஷனரி, பூர்ஷ்வாவாதி, என்ன கிழித்தார் காந்தி என ஏராள சொல்லடிசூடல்களும் வரவே செய்தன.
பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் காந்தி மீது வைத்த விமர்சனம் – அவர் காங்கிரஸ், சாதி இந்து ‘சுப்ரீமசிக்கு’ நிற்கிறார் என்பதே.
சுதந்திரமே அவரது இலக்கு, தீண்டாமையோ, இந்து – முஸ்லீம் ஒற்றுமையோ அல்ல என்றனர்.
இதை எதிரொலித்த இந்தியர்களும் உண்டு. காந்தி எந்த போராட்டத்தையும் தனித்த ஒன்றாக நடத்தவில்லை.
அவருக்கு விடுதலை, இந்து முஸ்லீம் ஒற்றுமை, தீண்டாமை, நிர்மாண திட்டம் என்பவை ஒருங்கிணைந்த போராட்டமாகவே இருந்தது.
காந்தி மீது பலருக்கும் அச்சமும் சந்தேகப் பார்வையும் இருந்திருக்கக்கூடும். தங்கள் வழியில் தங்கள் கனவை அவர்களின் சொந்த பலத்தில் நிறைவேற்ற முடியாமல் போவதற்கு, காந்தியை அவர்கள் தடையாகப் பார்த்தனர்.
தங்களின் எதிர்பார்ப்புகளை அவர் மீது ஏற்றி, ஏமாறும் போது விமர்சித்தனர். காந்திக்கு எவர் மீதும், எக்கருத்து மீதும் ஒவ்வாமையில்லை.
அவர் எதிரித் தரப்பு என எவரையும் பார்க்கவில்லை. எதிர்தரப்புடன் உரையாடலை நடத்திக் கொண்டேயிருந்தார். உண்மை எவரின் ஏகபோகமல்ல என்கிற தெளிவு காந்தியிடமிருந்தது.
நூலாசிரியர் சிவகுருநாதன் ஒரு ‘காந்தி சரிதையை’ மிக மிக எளிய வகையில் எழுதியுள்ளார்.
‘எல்லோருக்குமான காந்தி’ என்கிற தலைப்பே அதன் விசாலத் தன்மையை பறை சாற்றுகிறது. சிவகுருநாதன் கல்வியாளர்.
மாணவர்களின் உளவியல் உணர்ந்தவர். தேர்ந்த பன்முக சிந்தனைகளின் வாசிப்பாளர்.
இந்திய, குறிப்பாக தமிழ்ச் சமூகச் சூழலை உள்வாங்கி நூல்களை எழுதி வருபவர். அவரின் காந்தி குறித்த இந்நூல் தமிழ் வெளியில் நன்கு பேசப்படக்கூடிய நூலாக அமையும்.
காந்தியின் வாழ்க்கையின் அனைத்து முக்கிய புள்ளிகளையும் சிவகுருநாதன் இணைக்க பெருமுயற்சி எடுத்துள்ளார். அவரின் விரிவான வாசிப்பனுவமும், உள்வாங்கும் திறனும் ‘எல்லோருக்குமான காந்தியில்’ வெளிப்படும்.
பிறப்பு, குடும்பச்சூழல், கல்வி, லண்டன் பாரிஸ்டர், தென்னாப்பிரிக்கா போராட்டம், இந்தியா திரும்பி 1915லிருந்து, கோட்சேவின் குண்டு சாய்த்த காலம்வரை ஓயாத பணிகள் என இந்நூலில் காலவரிசையில், ஆசிரியர் கூற்றுவழி 18 இயல்களில் பதிவாகியுள்ளன.
காந்திக்கு பின்னரான இந்தியாவும் தொட்டுக்காட்டப்பட்டுள்ளது.

வேதாரண்யத்தில் உப்புசத்தியாகிரக காலத்தில் முடிதிருத்தும் தொழிலாளி வைரப்பன் குறித்துகூட சிவகுருநாதன் சொல்லும்போது, நுணுக்கமாக செய்திகளை சேகரித்து வெளிப்படுத்தும் உழைப்பைக் காணலாம்.
காந்தி காலத்தில் ஊடாடிய வடபுலத்து தலைவர்களை மட்டுமின்றி, தமிழக தலைவர்களின் ஊடாட்டத்தில் உடன்படும் – எதிர்வினையாற்றும் செய்திகளையும் சிவகுருநாதன் தரமுயற்சித்துள்ளது பாராட்டிற்குரியது.
காந்தி குறித்த எந்த நூலும் படிக்காத ஒருவருக்கு, சிவகுருநாதன் நூல் கிட்டுமெனில், ‘எல்லோருக்குமான காந்தி’ நல்ல நுழைவாயிலாக இருக்கும் என்றே சொல்லத் தோன்றுகிறது.
சிவகுருநாதன் இந்நூலை இவ்வாறு முடித்திருப்பார், “உண்மை, அன்பு, எளிமை, அகிம்சை, சகிப்புத் தன்மை, நல்லிணக்கம், அறம்சார் வாழ்வு, மது உள்ளிட்ட போதை விலக்கு, தனிமனித ஒழுக்கம் போன்றவை காந்தியத்தின் கூறுகளாகும்.”
சமூகத்திற்கு பயன்படத் தகுந்த ஏராள நூல்களை வெளியிட்டு வரும் நன்னூல் பதிப்பகம் தோழர் காதர், இந்நூலையும் கொணர்ந்து பெருங்கடமையை செய்துள்ளார். பாராட்டுகள்.
சிவகுருநாதனின் அரிய உழைப்பால் வந்துள்ள ‘எல்லோருக்குமான காந்தி’ காந்தி இலக்கியக் கிடங்கில் முக்கிய சேர்மானம். வாசிப்போர் காந்தியைக் கண்டறியமுடியும்.
நன்றி: ஆர். பட்டாபிராமன்
எல்லோருக்குமான காந்தி (மகாத்மாவின் கதை)
நூலாசிரியர்: மு.சிவகுருநாதன்
விலை: ரூ. 220
வெளியீடு: நன்னூல் பதிப்பகம்,
மணலி – 610203,
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம்.
தொடர்புக்கு: 9943624956
