ஈரானின் புஷெர் (Bushehr) அணுமின் நிலையம் அருகே இன்று சனிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். போர் தொடங்கியதிலிருந்து இந்தப் பதற்றமான பகுதி இலக்கு வைக்கப்படுவது இது நான்காவது முறையாகும்.
சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தகவல்படி, அணுமின் நிலையத்தின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த வீரர் ஒருவர், குண்டுவெடிப்பினால் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலால் அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடம் சேதமடைந்துள்ளது. எனினும், அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு கசிவு ஏதும் ஏற்படவில்லை என்றும், கதிர்வீச்சு அளவு சீராக இருப்பதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதல் குறித்து ஐ.ஏ.இ.ஏ பொதுச்செயலாளர் ரஃபேல் மரியானோ குரோஸி கடும் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், அணுமின் நிலையங்கள் அல்லது அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் எந்தச் சூழலிலும் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடாது. அணு உலைகள் மட்டுமின்றி, அங்குள்ள பிற கட்டிடங்களிலும் முக்கியமான பாதுகாப்பு அமைப்புகள் இருக்கலாம். இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்தால், அது ஒரு பெரிய அணுசக்திப் பேரழிவிற்கு வழிவகுக்கும் என எச்சரித்துள்ளார்.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சயீத் அப்பாஸ் அராக்ச்சி, புஷெர் அணுமின் நிலையம் மீதான தொடர் தாக்குதல்களுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
புஷெர் அணுமின் நிலையம் மீது இதுவரை 4 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டால் அதன் பாதிப்பு தெஹ்ரானை விட, வளைகுடா நாடுகளின் தலைநகரங்களையே அதிகம் பாதிக்கும் என அவர் எச்சரித்துள்ளார். மேலும், மேலை நாடுகளின் இரட்டை நிலைப்பாட்டையும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதற்கிடையே, புஷெர் அணுமின் நிலையத்தில் பணியாற்றும் தனது நாட்டுப் பணியாளர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற ஏதுவாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தற்காலிகப் போர்நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது. சுமார் 200 ரஷ்யப் பணியாளர்களை வெளியேற்றும் இறுதிக்கட்டப் பணிகள் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், அவர்கள் வெளியேறும் பாதையில் ராணுவ நடவடிக்கைகள் ஏதும் இருக்கக் கூடாது என ரஷ்யாவின் ‘ரோசாட்டம்’ அணுசக்தி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. மேலும் அணுமின் நிலையத்தைச் சுற்றி நிலவும் இந்த அசாதாரண சூழலால், வளைகுடா பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
