தொகுதி ஒதுக்கீடு சம்மதமாக பேச சென்ற பாஜக மேலிட பொறுப்பாளருக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஷாக் கொடுத்தார்.
புதுச்சேரியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்கிறது.
இதை கடந்த 14ந் தேதி காரைக்காலுக்கு வந்த மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்த பின் முதல்அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இதையடுத்த என்ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட 16 தொகுதிகளில் என்ஆர்.காங்கிரஸ் போட்டியிட உள்ளது.
இந்த நிலையில் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, புதுச்சேரிக்கு பிரதமர் வருகை, தொகுதி பங்கீடு குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமியை இன்று திலாசுப்பேட்டையில் உள்ள அவர் வீட்டில் சந்தித்தார். சுமார் 5 நிமிடங்கள் தான் இந்த சந்திப்பு நடந்தது. இதன் பின் சுரானா அங்கிருந்து கிளம்பிச்சென்றார். இந்த சந்திப்பின்போது, முதல்அமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இடம் பெறும். அதே நேரத்தில் தமிழகத்தில் தவெகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்த நிர்மல் குமார் சுரானா, இது தொடர்பாக கட்சி தலைமையிடம் தகவலை தெரிவிப்பதாக கூறிவிட்டு, வெளியேறினார்.
புதுச்சேரியே ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில் முதல்அமைச்சர் ரங்கசாமிக்கு செல்வாக்கு உள்ளது.
இந்த பகுதிகளில் ரங்கசாமியின் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இதனடிப்படையில் தமிழகத்தில் தவெகவுடன் கூட்டணி என முதல்அமைச்சர் கூறியுள்ளார். புதுவைக்கு ஒரு கூட்டணியும், தமிழகத்துக்கு தனி கூட்டணி என்ற முடிவை ரங்கசாமி எடுத்துள்ளதாக தெரிகிறது.
