ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான தேசிய போர் மூண்டதன் 89ஆவது நினைவு நாளை முன்னிட்டு, குவன்டோங் படையின் ரசாயனப் பிரிவின் தனிநபர் அறிக்கையை ஜப்பானிய இராணுவத்தின் 731ஆவது பிரிவின் குற்ற சான்றுகள் நினைவகம் வெளியிட்டது. குவன்டோங் படையின் ரசாயனப் பிரிவு 1939ஆம் ஆண்டில் சீனாவின் ஹெய்லோங்ஜியாங் மாநிலத்தின் சீசீஹார் நகரில் நிறுவப்பட்டது. 516ஆவது படைப்பிரிவு எனவும் அழைக்கப்பட்ட இப்பிரிவு, ஜப்பானிய ஆக்கிரமிப்பு படை சீன போர்க்களத்தில் நிறுவிய சிறப்பு ரசாயன படைப்பிரிவாகும். நரம்பியல் நச்சு, மூச்சு திணறல் உள்ளிட்ட நச்சுத்தன்மையுடைய பொருட்களை அது ஆராய்ந்து தயாரித்தது.
தனிநபர் அறிக்கையானது, ஜப்பானிய இராணுவத்தின் 516ஆவது படைப்பிரிவினர் போருக்குப் பின் ஜப்பானுக்குத் திரும்பிய போது எழுதிய தனிநபர் அடையாள தகவல் பதிவு படிவம் ஆகும். இது, ஜப்பானிய அதிகார வட்டாரத்தினால் பராமரிக்கப்படும் முக்கியமான இராணுவ சேவைப் பதிவு ஆவணமாகும். 2000ஆம் ஆண்டிற்குப் பிறகு ஜப்பானிய தேசிய ஆவணக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் இந்த ஆவணம் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது.
ஜப்பானிய இராணுவத்தின் 731ஆவது பிரிவின் குற்ற சான்றுகள் நினைவகத்தின் தலைவர் ஜின் சேங்மின் கூறுகையில், சீனா மீது படையெடுத்த ஜப்பானிய இராணுவத்தின் ரசாயனப் போர் திட்டமிடப்பட்ட தேசிய குற்றமாகும் என்பது வரலாற்றுப் பதிவுகளைத் தொகுத்து ஆராய்ந்ததன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
