இந்தியாவின் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றான யுபிஎஸ்சி (UPSC) சிவில் சர்வீசஸ் 2025 முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவைச் சேர்ந்த ஆகான்ஷ் துல் அகில இந்திய அளவில் 3-வது இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
ஏற்கனவே 2024-ம் ஆண்டு தேர்வில் 342-வது இடத்தையும், பின்னர் 295-வது இடத்தையும் பிடித்திருந்த ஆகான்ஷ், தனது தரவரிசையை மேம்படுத்த வேண்டும் என்ற தளராத உறுதியுடன் மீண்டும் களம் கண்டு இன்று தேசிய அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஹரியானா மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் கிருஷ்ணன் துல் மற்றும் அரசுப் பள்ளி முதல்வர் நிர்மல் துல் தம்பதியரின் மகனான இவர், சண்டிகரில் பள்ளிப் படிப்பையும், டெல்லி எஸ்ஆர்சிசி (SRCC) கல்லூரியில் பட்டப் படிப்பையும் முடித்துள்ளார். இவரது இந்த அசுர வளர்ச்சி ஹரியானா மாநிலத்திற்கே பெரும் பெருமையைச் சேர்த்துள்ளது.
ஆகான்ஷ் துல்லின் இந்த அபார வெற்றியைத் தொடர்ந்து, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி அவரது குடும்பத்தினரைத் தொலைபேசியில் அழைத்து நெகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். “விடாமுயற்சி ஒருபோதும் தோற்காது” என்பதற்கு ஆகான்ஷ் ஒரு சிறந்த உதாரணம் எனப் பாராட்டிய முதல்வர், விரைவில் அவர்களை நேரில் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த கால முயற்சிகளில் ஐஏஎஸ் கனவு நனவான போதிலும், சிறந்த ரேங்க் பெற வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து உழைத்த ஆகான்ஷின் விடாமுயற்சி தற்போது சமூக வலைதளங்களில் பலருக்கும் ஊக்கமளிக்கும் செய்தியாக மாறியுள்ளது. ஹரியானாவின் அரசியல் தலைவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் எனப் பலரும் ஆகான்ஷின் வீட்டிற்குச் சென்று இனிப்புகளை வழங்கித் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர்.
