தமிழக அரசியலில் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, மதுரையில் நேற்று பிரம்மாண்ட விழா நடைபெற்றது.
அதில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சுமார் 50,000 பேர் திரண்டு தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டு பலத்தைக் காட்டினர். மதுரையே அதிரும் வகையில் நடந்த இந்த இணைப்பு விழாவால் ஓபிஎஸ் தரப்பு உற்சாகத்தில் இருந்த நிலையில், இன்று அவருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சேலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ஸ்ரீரங்கம் தொகுதியைச் சேர்ந்த ஓபிஎஸ்-ஸின் தீவிர ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர், திடீரென சேலத்திற்குப் பயணம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
ஓபிஎஸ்-ஸின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்த அவர்கள், எடப்பாடியின் தலைமையே சிறந்தது எனக் கூறி அதிமுகவில் இணைந்துள்ள நிலையில், அவர்களை உற்சாகமாக வரவேற்ற இ.பி.எஸ், “தேர்தல் நெருங்கிவிட்டது, இனியும் தாமதிக்காமல் தீவிரமாகக் களப்பணியாற்றி வெற்றியை உறுதி செய்யுங்கள்” என அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மதுரையில் ஓபிஎஸ் காட்டிய பலத்திற்கு, சேலத்தில் ஆதரவாளர்களைத் தன்பக்கம் இழுத்து இ.பி.எஸ் கொடுத்த இந்த ‘கவுண்டர்’ அட்டாக், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
