Web team
வான் தொட்டில் !
நூல் ஆசிரியர் : காவல் உதவி ஆணையர், கவிஞர் முனைவர்
ஆ. மணிவண்ணன் a.m.lastcitizen@gmail.com
நூல் விமர்சனம் : கவிஞர் இரா இரவி !
வானதி பதிப்பகம், 23 தீனதயாளு தெரு, தியாகராயர் நகர், சென்னை17
192 பக்கங்கள் விலை ரூ. 125/- 044-24342810/2310769
vanathipathippakam@gmail.com
******
நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் ஆ.மணிவண்ணன் அவர்கள் காவல்துறை உதவி ஆணையாளர் பதவியில் இருந்த போதும் எல்லோரிடமும் மிக அன்பாக பழகிடும் பண்பாளர். காவல் துறையில் இருந்து கொண்டு கவிதைத்துறையிலும் தடம் பதித்து வருபவர். சிறந்த கவிஞர் என்பதைத் தாண்டி சிறந்த மனிதர் என்றே சொல்ல வேண்டும். உதவி ஆய்வாளராக பதவியில் சேர்ந்து உதவி ஆணையர் பதவி வரை பதவி உயர்வு பெற்றுள்ளார். நேர்மையான அதிகாரி.
கவிதைஉறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியார் அவர்கள் சகோதரி மதுரையில் இருக்கிறார். அவர்களுக்கு காவல்துறை உதவி தேவைப்பட்ட்து. நூல் ஆசிரியர் கவிஞர் மணிவண்ணன் அவர்களுக்கு அலைபேசியில் அழைத்து வேண்டினேன். உடன் உதவி செய்து முடித்துவிட்டு அலைபேசியில் அழைத்துத் தகவல் தந்தார். பதச்சோறாக ஒன்று சொல்லி உள்ளேன்.
என் போன்ற பல இலக்கியவாதிகளுக்கு சட்டத்திற்குட்பட்ட பல உதவிகளை செய்தவர், செய்து வருபவர். அகவிழி பார்வையற்றோர் விடுதிக்கு வர வேண்டும் என்று நான் அழைத்ததும் உடன் வந்து விழாவைச் சிறப்பித்தவர்.
‘வான் தொட்டில்’ நூலின் பெயரே வித்தியாசமாக உள்ளது. வான் தொட்டில் என்று படித்ததும் என் நினைவிற்கு வான்மேகம் வந்து போனது, இந்த நூலை மாமனிதர் அப்துல்கலாமிற்கு காணிக்கை ஆக்கி இருக்கிறார்.
காவல்துறை இயக்குநர் முனைவர் கி. இராதாகிருஷ்ணன், மேனாள் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் கி. இராதாகிருஷ்ணன், காவல்துறை தலைவர் அ. பாரி இ.கா.ப. ஆகியோரின் வாழ்த்துரையும்,தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களின் விரிவான விளக்கமான அணிந்துரையும் நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளது.
வானதி பதிப்பகத்தார் இந்த நூலை கவிதைக்குப் பொருத்தமான படங்களுடன் மிக நேர்த்தியாக அச்சிட்டுள்ளனர். பாராட்டுகள்.
இது நூலாசிரியரின் 4வது நூல். அவரது முந்தைய நூல்கள் படித்து மதிப்புரை இணையத்தில் பதிவு செய்து இருக்கிறேன்.
நூல் ஆசிரியர் உலகப் பொதுமறை திருக்குறள் ஆழ்ந்து படித்தவர். அறவழியில் நடப்பவர், கவிதைகளும் அறம் பாடுகின்றன.
நான்
பொதுப்பாதை
வரிசையில் கடைசியில் நிற்கிறேன்
சிலர்
குறிப்பிட்ட
குறுக்குவழியில்
சென்று அடையும்
பதவியை…!
என் பொதுப்பாதையில் நிற்போர்
எவ்வளவு மனதால் சாபமிடுவார்கள்
அந்தச் சாபம்
எனக்கு வேண்டாம்
மெதுவாய்க்
கிடைக்கட்டும்
மேன்மைப்பதவி,
நேர்வழியில் நடப்பதுவே நிம்மதியான வாழ்க்கை, குறுக்கு வழி என்பது கேடு தரும் என்பதை அழகாக காட்டி உள்ளார். பாராட்டுகள்.
உயிர்காக்கும் உன்னதப் பணிபுரியும் மருத்துவர்களில் சிலர் பணத்திற்காக பலரைச் சுரண்டிடும் அவலத்தை எள்ளல் சுவையுடன் உணர்த்தியுள்ளார். பாராட்டுக்கள்.
தெப்பக்குளம் வெட்டித்தான்
அன்றைய மன்னன்
திருமலை நாயக்கர்
அவ்வளவு பெரிய
அரண்மனையைக் கட்டினான் !
இன்றைய மருத்துவமன்னர்களும்
அரண்மனை கட்ட
நோயாளிகள்
நாங்கள் ஒத்துழைக்கிறோம்.
உண்மைதான் நோயாளிகளிடம் சுரண்டி சிலர் அரண்மனை போல வீடு கட்டி உள்ளனர்.
கடவுளின் சன்னதியில் நடக்கும் பராபட்சத்தை கடிந்து உள்ளார். நூல் ஆசிரியர் கவிஞர் மணிவண்ணன் சிறந்த ஆன்மிகவாதி, பகுத்தறிவுவாதி அல்ல. ஆனாலும் நாட்டில் கடவுள் முன் நடக்கும் அநீதியை கவிதையில் சுட்டி உள்ளார்.
ஆயிரத்தெட்டு தடவை
போற்றிப் பாடிய
என்னை
விடுத்து !
‘ஆடி’ காரில்
வந்தவரை முதலில்
அழைத்தவரே !
என்னைவிட உனக்காக
அலகு குத்தி
பறவைக் காவடியில்
தொங்கிய பக்தனை
அழைத்திருந்தால் !
உன்னைப் பாராட்டியிருப்பேன்.
நூல் ஆசிரியர் அவர்கள் காவல்துறை அலுவலராகப் பணி புரிவதால் மனதில் பட்டதை எழுத முடியாது. எதையும் அடக்கியே வாசிக்க வேண்டும். அதனையும் கவிதையில் காட்டி உள்ளார்.
தெரியவில்லை ஆண்டவனே
அகத்தியனாக மாறி இந்த
ஆ.மணிவண்ணன்
என்ற
காவிரி நதியை காவல்துறையெனும்
கமண்டலத்தில்
அடைத்து விட்டான். எந்த விநாயகர்
வந்து
கொட்டிவிட்டு
நதியாக்கப்போகிறாரோ. தெரியவில்லை.
இன்னும் சில ஆண்டுகள் உள்ளன. ஓய்வுபெற்ற பின் நீங்கள் சுத்ந்திரமாக எழுதிக் கொள்ளலாம். நெஞ்சு பொறுக்குதில்லையே என சில கவிதைகளும் பாடி உள்ளார். வாக்களிக்க பணம் வாங்கிடும் அவலத்தையும் கட்டி உள்ளார்.
நமக்காக சிந்திப்போம்!
மக்க்ளாட்சித் திருவிழாவான
தேர்தல் !
ஊழல் பணம்
கடைசிக் குடிமகனுக்கும்
பாய்கின்றது !
உண்மையான
பொதுவுடைமை
இதுவென்று நாம்
பெருமை கொள்ள! இயலாது !
வெட்கப்பட வேண்டும்.
உண்மைதான் உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு என்று மார் தட்டும் நமக்கு, இது தலைகுனிவுதான். கேவலம் தான்.
எந்த சூழ்நிலையிலும் யார் எள்ளி நகையாடினாலும் அறம் தவறாதே நேர்வழியிலேயே தொடர்ந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியது சிறப்பு. பாராட்டுகள்.
நீ நீயாகவே இரு
உன் கொள்கையால்!
உன் குடும்பத்தார்
சற்று சங்கடம்
அனுபவித்தாலும் தலைமுறையை நிமிரச்செய்கின்றாய்
அது
உன்
தலைமுறையை ஒங்கச் செய்யும்.
தடுக்கி விழுந்தால் மதுக்கடை. முன்பு யாராவது ஒருவர்தான் குடிப்பார். ஆனால் இன்று யாராவது ஒருவர் தான் குடிக்காமல் இருக்கிறார். அவரையும் கேலி செய்து மகிழ்கின்றனர்.
குடித்துவிட்டு வாகனம் ஒட்டுவது வாடிக்கையாகி விட்டது. விழிப்புணர்வு விதைக்கும் வாகனங்கள் பல எழுதி உள்ளார். அவற்றிலிருந்து பதச்சோறாக ஒன்று.
சாதாரணமாய்! தடுமாறும் நீ
‘சரக்கை’ ஏற்றி
சறுக்கி விழலாமா
சாவினை
வரவேற்கலாமா?
காவல்துறையில் உள்ள இடப்பாடுகளை காவலர் அடையும் துன்பங்களையும் கவிதையில் கட்டி உள்ளார்.
எல்லைக் காக்கும்
ராணுவம் சந்திப்பது!
என்றாவது
ஒரு தடவை போர் !
நாங்கள் மக்களி(ன்)டம்
உள் நாட்டுப் போர்களை
தினமும் சந்திக்கின்றோம் !
உண்மைதான் இன்றைக்கு தினந்தோறும் போராட்டம் ,கலவரம் செய்தியாக வருகின்றது.
நான் மிகவும் நேசிக்கும் என் பிறந்த ஊரான மதுரையைப் பற்றியும் கவிதை எழுதி உள்ளார்.
மதுரைக்காரனுக்கு
தங்கம் மட்டுமல்ல
வாழும் போதே சொர்க்கம்
தமிழ் வளரச் சங்கம் வளர்த்து
தலைநிமிர்ந்த பூமி.
மதிப்புரையில் குறிப்பிட என்று மடித்து வைத்துக் கொண்டே வந்தேன் கடைசியில் எல்லாப்பக்கத்தையும் மடித்துவிட்டேன். பின் மறு ஆய்வு செய்து தேர்ந்தெடுத்தேன். பாராட்டுகள்.
வாழ்த்துகள்..! தொடர்ந்து எழுதுங்கள்..!