சுக்கோய்-57’ (Su-57M1E) ரக ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது

Estimated read time 1 min read

இந்திய விமானப்படையின் (IAF) பலத்தை அதிகரிக்கும் வகையில், நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ‘சுக்கோய்-57’ (Su-57M1E) ரக ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது.

குறிப்பாக, இந்த விமானத்தின் மென்பொருள் ரகசிய குறியீடுகள் (Source Code) மற்றும் முழுமையான தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ளவும் ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இந்திய விமானப்படை 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இருப்பினும், அண்டை நாடான சீனா ஏற்கனவே J-20 மற்றும் J-35 போன்ற ஐந்தாம் தலைமுறை அதிநவீன போர் விமானங்களை இயக்கி வருகிறது.

மேலும், பாகிஸ்தானுக்கும் இத்தகைய விமானங்களை வழங்க சீனா திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான ‘அம்கா’ (AMCA) போர் விமானங்கள் பயன்பாட்டிற்கு வர 2030-களின் இடைப்பகுதி வரை ஆகும் என்பதால், தற்போதைய இடைவெளியை நிரப்ப ரஷ்யாவின் இந்த ‘சுக்கோய்’ ஆஃபர் முக்கியத்துவம் பெறுகிறது.

‘விங்ஸ் இந்தியா 2026’ (Wings India 2026) கண்காட்சியின் போது நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனையில் ரஷ்யா இந்த புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. பிரமோஸ் மற்றும் அஸ்த்ரா ஏவுகணைகளைப் போலவே, இந்த விமானத்தின் தொழில்நுட்பத்தையும் முழுமையாக இந்தியாவிடம் ஒப்படைக்க ரஷ்யா தயாராக உள்ளது.

அமெரிக்காவின் F-35 விமானம் ஒற்றை இருக்கை கொண்டது. ஆனால், ரஷ்யாவின் Su-57M1E இரட்டை இருக்கைகளைக் கொண்டது. இதில் பின்னால் இருக்கும் அதிகாரி, நவீன ட்ரோன் (Drone) படைகளை வழிநடத்தும் தளபதியாகச் செயல்பட முடியும். இந்த விமானத்தின் முக்கிய பாகங்களை இந்தியாவிலேயே தயாரிக்க ரஷ்யாவின் ‘யுனைடெட் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன்’ (UAC) விரிவான திட்டத்தை வழங்கியுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு, அதிக செலவு மற்றும் தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக ரஷ்யாவுடனான ஐந்தாம் தலைமுறை போர் விமானத் திட்டத்திலிருந்து (FGFA) இந்தியா வெளியேறியது. இப்போது அந்தத் திட்டத்தை மீண்டும் புதுப்பிக்க ரஷ்யா ஆர்வம் காட்டி வருகிறது. இந்தியா தற்போது 40 விமானங்கள் (இரண்டு ஸ்குவாட்ரன்) வாங்குவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. இது உறுதியானால், தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் வான்வெளி ஆதிக்கம் பலமடங்கு அதிகரிக்கும் என பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author