கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டைப் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மறைமுக வட்டி அல்லது கூடுதல் அபராதங்கள் விதிப்பதைக் கட்டுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய உத்தரவின்படி வட்டி கணக்கிடும் முறை, தாமதக் கட்டணம் மற்றும் இதர சேவைக் கட்டணங்கள் குறித்த முழுமையான தகவல்களை வாடிக்கையாளர்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் வாடிக்கையாளரின் முறையான அனுமதி இன்றி கடன் அட்டைக்கான கடன் உச்சவரம்பை வங்கிகள் தாமாகவே உயர்த்தக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல் கடன் அட்டைக்கான தொகையைப் பகுதியளவு செலுத்தியிருந்தால் நிலுவையில் உள்ள மீதித் தொகைக்கு மட்டுமே தாமதக் கட்டணம் விதிக்கப்பட வேண்டும் என்றும் முழுத் தொகைக்கும் அபராதம் வசூலிக்கக் கூடாது என்றும் புதிய விதியில் கூறப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்படாத கடன் அட்டைகளை ரத்து செய்ய வாடிக்கையாளர் விண்ணப்பித்தால் அந்தத் தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் வங்கிகள் அதனை ரத்து செய்ய வேண்டும்.
வாடிக்கையாளர்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்யவும் வங்கிச் சேவைகளில் நிலவும் சிக்கல்களைக் குறைக்கவும் இந்த அதிரடி மாற்றங்களை ரிசர்வ் வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது.
