அதிபர் டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கைக்கு ரஷ்யா கடும் கண்டனம்!!! 

Estimated read time 0 min read

ஈரான் நாட்டுடன் போர் புரிந்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது தனது கவனத்தைக் கியூபா நாட்டின் பக்கம் திருப்பியுள்ளார்.

அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே நீண்டகாலமாகப் பகை நிலவி வரும் சூழலில் கியூபாவுக்கு வெனிசுலா நாட்டில் இருந்து வழங்கப்பட்டு வந்த எரிபொருள் விநியோகத்தை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளது.

இதனால் கியூபா நாடு முழுவதும் கடும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோடு தொடர் மின்வெட்டும் நிலவி வருகிறது. இந்தச் சூழலால் அதிருப்தி அடைந்த கியூபா மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராகத் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டிரம்ப் ஈரானுடனான போர் நடவடிக்கைகள் தணிந்த பிறகு அமெரிக்காவின் அடுத்த நடவடிக்கை கியூபாவை நோக்கியே இருக்கும் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

கியூபாவை விடுவிப்பதா அல்லது கைப்பற்றுவதா என்பது குறித்துத் தனது நிர்வாகம் ஆலோசித்து வருவதாகவும் அந்தத் தீவு நாட்டை வசப்படுத்தும் கௌரவம் தமக்குக் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கியூபாவை அமைதியான முறையில் கைப்பற்றுவது குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் அமெரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கியூபாவை எந்நேரமும் கைப்பற்றுவோம் என்ற அமெரிக்க அதிபரின் எச்சரிக்கைக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டை மற்றொரு நாடு மிரட்டுவது சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரானது என்றும் சட்டவிரோதமானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

கியூபாவுடன் ரஷ்யா எப்போதும் அசைக்க முடியாத ஒற்றுமையுடன் இருக்கும் என்றும் அந்நாட்டிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் ரஷ்யா உறுதி அளித்துள்ளது. இதனால் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே மீண்டும் ஒரு மோதல் போக்கு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author