திமுகவில் அண்மையில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுகவுக்கு ஆதரவாக தென் மாவட்டங்கள் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆண்டிப்பட்டி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட அவர், திமுக அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும், ஸ்டாலின் ஆட்சியின் சாதனைகள் குறித்தும் பேசி வருகிறார்.
அந்த வகையில், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பேசிய ஓ பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று ஆரம்பத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் என்னிடம் தெரிவித்தனர். ஆனால், அதிமுகவின் நலனைக் கருத்தில்கொண்டு அதை நான் ஏற்கவில்லை. இப்போது நினைத்து பார்க்கிறேன். எடப்பாடி பழனிசாமி ஆட்சியை காப்பாற்றியதுதான் நான் என் அரசியல் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு. நான் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தந்தேன். ஆனால், அவரோ அந்த நன்றி இல்லாமல் என்னை அரசியலில் இருந்து நீக்க முயன்றார்.
பழனிசாமி ஒன்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர் ஆனவர் கிடையாது. அவர் ஒரு நன்றிகெட்ட அரசியல்வாதி. டெல்லிக்கு அடிமையாக இருக்கும் அவரை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள். எனவே, திமுகவுக்கு 234 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றியை மக்கள் வழங்க வேண்டும். மீண்டும் முதலமைச்சராக ஸ்டாலின் வர வேண்டும்” என கூறினார்.
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பல்வேறு திருப்புமுனைகள் ஏற்பட்டு வருகின்றன. முதலில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம் உட்பட ஒருவர் பின் ஒருவராக திமுகவில் இணைந்தனர். பின்னர், ஓபிஎஸ், அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் கடந்த மாதம் திமுகவில் இணைந்தனர். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான ஓபிஎஸ்சின் இந்த முடிவு, தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
