ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய மிகப்பெரிய தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தற்போது “காயம்பட்ட சிங்கமாக” சீறி எழுந்துள்ளது.
அமெரிக்காவின் ராணுவத்தாவரங்கள் அமைந்துள்ள உலக நாடுகளின் பல்வேறு இடங்களை இலக்கு வைத்து ஈரான் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் தனது அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேலின் ஆராத் (Arad) மற்றும் டிமோனா (Dimona) நகரங்கள் மீது ஏவியுள்ளது. இதில் அதிரவைக்கும் விஷயம் என்னவென்றால், டிமோனா நகரில்தான் இஸ்ரேலின் மிகவும் ரகசியமான மற்றும் முக்கியமான அணுசக்தி ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது.
ஈரான் நடத்திய இந்த சரமாரி ஏவுகணைத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோக்களில், ஏவுகணைகள் டிமோனா நகருக்குள் விழுந்து வெடிப்பதையும், மக்கள் அலறியடித்துக்கொண்டு பதுங்கு குழிகளை நோக்கி ஓடுவதையும் காண முடிகிறது. இந்தத் தாக்குதலில் 10 வயது சிறுவன் ஒருவன் பலத்த காயமடைந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் தாக்குதல் குறித்து சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) ஆய்வு நடத்தியது. “டிமோனா நகரில் தாக்குதல் நடந்தாலும், அங்கிருந்து 13 கி.மீ தொலைவிலுள்ள அணுமின் நிலையத்திற்குப் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை” என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், அணுசக்தி மையங்களை இலக்கு வைப்பது உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
“எங்களை அழிக்க நினைத்தால், இஸ்ரேலின் அணுசக்தி மையங்களைத் தகர்ப்போம்” என்று ஈரான் ஏற்கனவே எச்சரித்திருந்தது. தற்போது அமெரிக்கா விடுத்த கடும் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல், ஈரான் தனது தாக்குதல்களைப் பன்மடங்கு தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் இந்த மோதலானது ஒரு முழு அளவிலான அணுஆயுதப் போராக மாறிவிடுமோ என்ற அச்சத்தில் சர்வதேச சமூகம் உறைந்து போயுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேல் ராணுவம் தனது அடுத்தகட்ட நடவடிக்கைக்குத் தயாராகி வருகிறது.
