ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருந்தது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்தச் சூழலில், “48 மணி நேரத்திற்குள் இப்பாதையைத் திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்தார். இந்த மிரட்டலைத் தொடர்ந்து, ஈரான் தனது நிலைப்பாட்டைத் தளர்த்தியுள்ளது.
சர்வதேச கடல்சார் அமைப்பிடம் பேசிய ஈரானின் பிரதிநிதி அலி மூசாவி, ஈரானின் எதிரி நாடுகளைத் தவிர மற்ற அனைத்து நாடுகளின் கப்பல்களும் இந்தப் பாதையைப் பயன்படுத்த அனுமதிப்போம் என்று உறுதியளித்துள்ளார்.
கடல்வழிப் பாதுகாப்பை உறுதி செய்ய சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு ஆதரவான அல்லது ஈரானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கப்பல்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படாது என்பதில் ஈரான் பிடிவாதமாக உள்ளது.
உலக நாடுகளின் 20 சதவீத எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யும் இந்த நீர்வழிப்பாதை ஓரளவு திறக்கப்பட்டாலும், அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற பதற்றம் உலக அரங்கில் நீடிக்கிறது.
ஈரானின் இந்த விளக்கம் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு முழுமையாகப் பொருந்தாததால், போர்ச் சூழல் மேலும் சிக்கலாகியுள்ளது.
