பிரதமர் நரேந்திர மோடியை வெடிகுண்டு வீசிக் கொலை செய்யப் போவதாக அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் (E-mail) மூலம் மிரட்டல் விடுத்துள்ளது
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சட்டமன்றத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு வந்த இந்த மிரட்டலில், பிரதமர் மோடி மட்டுமன்றி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் டெல்லி துணைநிலை ஆளுநர் ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
டெல்லி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மிரட்டல் மின்னஞ்சலைத் தொடர்ந்து, டெல்லி சட்டமன்ற வளாகம் மற்றும் விதான் சபா மெட்ரோ நிலையம் ஆகிய பகுதிகளில் மோப்ப நாய் படை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதுவரை சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றாலும், பிரதமர் மற்றும் முக்கிய அமைச்சர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது, இதனை அனுப்பியது யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
