மார்ச் 28-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கவுள்ள 19-ஆவது ஐபிஎல் சீசனுக்காக, அனைத்து 10 அணிகளுக்கும் பிசிசிஐ (BCCI) புதிய மற்றும் கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது.
நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் முதல் போட்டிக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி போட்டி நடைபெறும் மைதானங்களில் பயிற்சியின் போது இனி ‘ஓபன் நெட்ஸ்’ (Open Nets) அனுமதிக்கப்படாது. ஒவ்வொரு அணிக்கும் பயிற்சிப் பகுதியில் 2 வலைகளும், பிரதான மைதானத்தின் பக்கவாட்டில் அதிரடி ஆட்டத்தைப் (Range hitting) பயிற்சி செய்ய ஒரு விக்கெட்டும் மட்டுமே ஒதுக்கப்படும். ஒரு அணி தனது பயிற்சியை முன்னதாகவே முடித்தாலும், அந்த நேரத்தை மற்றொரு அணி பயன்படுத்த அனுமதி கிடையாது.
ஐபிஎல் போட்டி நடைபெறும் நாட்களில் பிரதான மைதானத்தில் எந்தவிதப் பயிற்சியும் மேற்கொள்ளக் கூடாது. அதேபோல், போட்டி நடக்கும் நாளில் வீரர்கள் தங்களது உடல் தகுதியைச் சோதிக்கும் ‘பிட்னஸ் டெஸ்ட்’ (Fitness Test) சோதனைகளையும் மைதானத்தில் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வீரர்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கையாக, அனைத்து வீரர்களும் அணிக்கு என ஒதுக்கப்பட்ட பேருந்தில் மட்டுமே மைதானத்திற்கு வர வேண்டும். வீரர்களின் பலத்திற்கு ஏற்ப இரண்டு பேருந்துகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
THE BCCI GUIDELINES FOR IPL TEAMS.
match day practices are not allowed.
Floppies and sleeveless jerseys won’t be allowed in the Post match presentation.
A warning will be served on the 1st breach of wearing Floppies and sleeveless.
A financial penalty on… pic.twitter.com/1VDHhPBsCy
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 24, 2026
வீரர்களின் குடும்ப உறுப்பினர் வீரர்களுடன் பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை. அவர்கள் தனிப்பட்ட வாகனங்களில் வந்து, நேரடியாக மைதானத்திலுள்ள ‘ஹாஸ்பிடாலிட்டி’ (Hospitality Area) பகுதிக்குச் செல்ல வேண்டும். பயிற்சி நாட்களிலும் இதே நடைமுறை தொடரும். பயிற்சி நாட்களில் அங்கீகாரம் பெற்ற ஊழியர்கள் மட்டுமே உடை மாற்றும் அறை மற்றும் களத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். வீரர்கள் பந்துகளை அடிக்கும்போது மைதானத்திலுள்ள LED விளம்பரப் பலகைகளில் படாதவாறு கவனமாக இருக்க வேண்டும். மாற்று வீரர்கள் அந்தப் பலகைகளின் முன்பு அமரக் கூடாது.
ரஞ்சு மற்றும் ஊதா நிறத் தொப்பிகளைப் பெற்றுள்ள வீரர்கள், போட்டியின் முதல் இரண்டு ஓவர்களிலாவது கட்டாயம் அவற்றைத் அணிய வேண்டும். போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாக்களின் போது வீரர்கள் ‘ஸ்லீவ்லெஸ்’ (Sleeveless) ஜெர்சிகளையோ அல்லது ‘பிளாப்பீஸ்’ (Floppies) தொப்பிகளையோ அணியக்கூடாது. இதனை மீறினால் அபராதம் விதிக்கப்படும். மேலும் பிசிசிஐ அங்கீகாரம் பெற்ற ஊழியர்கள் போட்டி நாட்களில் கட்டாயம் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அந்த அணிக்கு அபராதம் விதிக்கப்படும்.




