இந்திய வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களால் நீண்ட காலமாக உரிமை கோரப்படாமல் இருந்த சுமார் ₹60,518 கோடி பணம், கடந்த ஜனவரி மாதம் வரையிலான நிலவரப்படி இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI) மாற்றப்பட்டுள்ளது.
மக்களவையில் மத்திய நிதியமைச்சகம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு பணப்பரிவர்த்தனையும் செய்யப்படாத சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகளில் உள்ள தொகையே இவ்வாறு “உரிமை கோரப்படாத வைப்புத்தொகை” (Unclaimed Deposits) என வகைப்படுத்தப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் பொதுத்துறை வங்கிகளில் மட்டும் சுமார் ₹53,000 கோடிக்கும் அதிகமான பணம் முடங்கிக் கிடப்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்பிஐ (SBI), பிஎன்பி (PNB) போன்ற முன்னணி வங்கிகளில் அதிகப்படியான உரிமை கோரப்படாத தொகை இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
பொதுமக்கள் தங்களது பழைய வங்கி கணக்குகள் அல்லது மறைந்த முன்னோர்களின் கணக்குகளில் உள்ள பணத்தை மீட்க ஏதுவாக ‘உத்கம்’ (UDGAM) என்ற இணையதளத்தை ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வளவு பெரிய தொகை அரசின் கைக்கு மாறியுள்ளது தற்போது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
